குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற பிரதி சபாநாயகர் தெரிவின் போது, நாடாளுமன்றத்தில் இருந்து வெளி நடப்புச் செய்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு 16 பேர் அணியுடன் இணைய உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவுக்கு வாக்களிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். எனினும் சமல் ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க உட்பட 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக செயற்பட்டதுடன் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில், குறித்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிப்பது என அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.