“பரீட்சையில் தேர்ச்சியை வழங்க விரிவுரையாளர்கள், மாணவிகளிடம் தொடர்ந்தும் பாலியல் இலஞ்சம் கோரி வருகின்றனர்”
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிதியை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் விரிவுரையாளர் ஒருவர், ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தமை குறித்து தான் ஆச்சரியப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் நிதியில் வீட்டை பராமரிப்பது, மின்சார கட்டணங்களை செலுத்தியமை தொடர்பில் இந்த விரிவுரையாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோப் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. விரிவுரையாளருக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டு பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த நபர் சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வருகிறது. அப்படியான ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தமை குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர் என்ற வகையில் நான் ஆச்சரியப்படுகிறேன்.
ஒலுவில் பல்கலைக்கழகத்தின் மாபியா செயற்பட்டு வருகிறது. பரீட்சையில் தேர்ச்சியை வழங்க விரிவுரையாளர்கள், மாணவிகளிடம் தொடர்ந்தும் பாலியல் இலஞ்சம் கோரி வருகின்றனர்.
நான் அண்மையில் ஒலுவில் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேராசிரியர் சீனி மொஹமட் நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.