குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர் என, ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது, இந்த உணர்வுகளுக்கு தலைவணங்கி, அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், அவர் இன்று (12.06.18) கொழும்பில் நடைபெற்ற எளிய அமைப்பின் ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாக செயற்படுத்தும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை “வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை தடுப்பதற்கான பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை சிறையில் அடைக்கின்றார்கள். அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மௌமான இருப்பது ஏன் என புரியவில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 comments
சிவில் பாதுகாப்புப் பிரிவு 4,000 முன்னாள் போராளிகளுக்கு மாதம் ரூபா 35,000 சம்பளம் கொடுத்து தோட்ட வேலை செய்வதற்கு அமர்த்தியுள்ளது. இந்த அதிகாரி அதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இந்தப் பிரியாவிடை மூலம் முன்னாள் போராளிகள் நன்றிக் கடனை செய்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
‘கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வடமாகாண முதலமைச்சர் சி . வி. விக்னேஸ்வரன் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர்’, என்பதும் , ‘முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் இந்த உணர்வுகளுக்குத் தலைவணங்கி, அவர்கள் இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும், என்பதும் ஒரு புறமிருக்கட்டும்.
அதிகம் கொக்கரித்து, நீலிக் கண்ணீர் வடிக்கும் திரு. சரத் வீரசேகர, குறித்த முன்னாள் விடுதலைப் புலிகளிடமிருந்தோ அன்றித் தமிழ் மக்களில் ஒருவரிடமிருந்தாவது இது போன்றதொரு கௌரவத்தைப் பெற்றுக் காட்டுவாரா? இவருக்கு மட்டுமல்ல, திரு. சவேந்திர சில்வா உட்படப் போர்க் குற்றச் சாட்டுக்குள்ளான யாராலும் இது போன்றதொரு கௌரவத்தைப் பெற முடியாது. அது மட்டுமன்றி, திரு. ரத்தனப்பிரிய பந்துகூட, உண்மையான உணரவின்பேரில் கௌரவிக்கப்பட்டாரா அன்றிப் பின்புலத்தில் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டார்களா, என்பது கூட விவாதத்துக்குரியதாகும்.
மேலும், திரு. கோத்தபாய ராஜபக்ஷ உட்பட, ராஜபக்ஷர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும்,
இராணுவத்தினருக்கும் கூட, தமிழர்கள் எல்லோரும் புலிகளாகவே தெரிகின்றார்கள். ஆனால் தமிழராகிய நாம் இராணுவத்தினரிடையே இருக்கும் நேர்மையான, நியாயமான, மனிதாபிமானமுள்ளவர்களைப் பிரித்தறியும் திறமையைக் கொண்டுள்ளோம், அந்த வகையில் திரு. ரத்தனப்பிரிய பந்துவைச் சம்பந்தப்பட்டவர்கள் பகுத்தறிந்திருக்கலாமென்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆக, தமிழ் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் தகுதி திரு. வீரசேகரவுக்குக் கிஞ்சித்தும் இல்லை, என்பதை அவர் முதலில் உணர வேண்டும்.