முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கோரியும் கடந்த 14 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வரும் பணி பகிஷ்கரிப்பு தொடர்கின்றது .
போராட்டக்காரர் மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது மாவட்டத்தில் உள்ள பேருந்துகள் மாதத்தில் 10, 12 நாட்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதாகவும் ஏனைய மாவட்ட பேருந்துகள் எல்லா நாட்களும் சேவையில் ஈடுபடுவதாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர், வழித்தட அனுமதி வழங்குமாறு கோரிய போதும் தமது கோரிக்கையை மதிக்காது வடமாகாண போக்குவரத்து அதிகார சபையால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டாமையை கண்டடித்தும் தமது கோரிக்கைகளை தம்முடன் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவுக்கு சென்ற வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடமாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் இன்றி, தன்னால் தீர்மானம் எடுக்க முடியாது எனவும் ; அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது போராட்டத்துக்கான தீர்வு கிடைக்கும் வரை தாம் போராட போவதாகவும் தீர்வு கிடைக்கவில்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும்; தெரிவித்த பேருந்து உரிமையாளர்கள், தொடர்ந்து இன்றும் 3 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் முதலமைச்சருடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்க முடியாத நிலையில் திங்கட் கிழமை போக்குவரத்து அதிகார சபை மற்றும் பேருந்து உரிமையாளர்களது நிலைமைகளை அறிக்கையிட்டு, ஒரு தீர்வினை தருவதாக கலந்தரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.