குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராம மக்கள் இன்று(20) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று காலை 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வயல் காணிகளை வழங்குமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1883ம் ஆண்டு குறித்த பகுதியில் தலா ஒரு ஏக்கர் காணி வழங்குவதாக தெரிவித்த போதிலும் தற்போது குறித்த காணியை வனவள பாதுகாப்பு பிரிவினர் தமது பிரதேசமாக கூறி அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த காணிகளை தமக்கு தருமாறு கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூநகரி வாடியடி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பூநகரி பிரதேச செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.
இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்,
1983ம் ஆண்டு சுமார் 48 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டது. இதன்போது தலா ஒரு ஏக்கர் காணி நெற்செய்கை காணியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழலில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். மிகுதியாக எஞ்சியவர்களிற்கு குறித்த காணி கிடைக்குமென நீண்ட காலமாக எதிர்பார்த்தோம். ஆனால் அது கிடைக்கவில்லை. தற்போது குறித்த காணிகளை தற்போது வனவள பாதுகாப்பு பிரிவினர் தமது காணிகள் என தெரிவித்து மர கன்றுகளை நாட்டி வருகின்றனர். எமக்கு குறித்த காணிகளை தருமாறு தெரிவித்து பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்கள் வழங்கினோம். ஆனால் இன்றுவரை எவ்வித தீர்வும் இல்லை என மக்கள் தெரிவித்தனர். இதேவேளை நாம் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றோம். இந்த நிலையில் எமக்கு குறித்த காணிகளை வழங்கினால் ஓரளவேனும் எமது கஷ்டத்தை போக்க முடியும் எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் மக்களிற்கு 1983ம் ஆண்டு காணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்த வரைபடம் இங்கு காணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளூம். அவர்களிடமிருந்து பதில் கிடைக்கும்வரை எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும் குறித்த மக்களிற்கு காணி கிடைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றூம். இன்றய தினம் மக்களால் ஜனாதிபதிக்கென வழங்கப்பட்ட மகஜரை உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்திலிருந்து வெளியேறிய போராட்டகாரர்கள், பூநகரி பிராந்திய வனவள பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தமது காணிகளை கையளிக்குமாறு தெரிவித்து அங்கும் மகஜர் கையளித்தமை குறிப்பிடதக்கதாகும்.