கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா அரசு சுமார் 13 ஆயிரம் புலம்பெயர்ந்தோரை, கொதிக்கும் சஹாரா பாலைவனத்தில் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று நிர்கதியாக விட்டுவிட்டுச் சென்றுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கைக்குழந்தைகள், சிறுவர்கள் அடங்குகின்றனர் எனவும் உணவு, குடிநீரின்றி துப்பாக்கி முனையில் இவர்களை 48 டிகிரி கொதிக்கும் சஹாரா வெயிலில் நடத்திச் சென்றதாகசும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் சிலர் 15 கிமீ சனநடமாட்டமற்ற பகுதியைக் கடந்து அசமாக்கா என்னும் கிராமத்தை அதிர்ஷ்டவசமாகக் கண்டடைந்துள்ளனர். ஏனையவர்கள் பாலைவனத்தில் கொதிக்கும் வெயிலில் அலைந்து திரிந்த நிலையில் ஐநா மீட்புக் குழு அவர்கள் மீட்டுள்ளது. எனினும் பலர் இதில் காணாமல் போயுள்ளனர், எனவும் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. அசமாக்கா கிராமத்தை கண்டடைந்த 24 பேர்களை அசோசியேட் பிரஸ் பேட்டி கண்டபோது தங்களுடன் வந்த பலரும் சஹாராவுக்கு இரையானார்கள் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பிணமாகக் கிடந்தனர் எனவும் ஏனையவர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி அளித்தமையை தொடர்ந்து அகதிகளை அப்புறப்படுத்தும் கொடூர நடவடிக்கை ஒக்டோபர் 2017-லிருந்து ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது எனினும் இதனை மறுத்துள்ள அல்ஜீரியா தன் நாட்டின் மீது களங்கம் சுமத்த மேற்கொள்ளப்படும் விஷமப் பிரச்சாரம் எனத் தெரிவித்துள்ளது.