குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மன்னார்…
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (10) செவ்வாய்கிழமை 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் , விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம் பெற்றுள்ளது.
-காலை 7.30 மணிக்கு ஆரம்பமான பணிகள் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) 30 ஆவது தடவையாக இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது இது வரை 23 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 37 மனித எச்சங்கள் அடையாள படுத்தப்பட்டுள்ளதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த புதைகுழியில் சுமார் (3 ½) அடி நீளம் உள்ள ஒரு மனித எச்சமும் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்படுள்ளது எனவும் குறித்த மனித எச்சம் தொடர்பாக அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனவே குறித்த அகழ்வு பணி எப்போது நிறைவடையும் எனக்கூற முடியாது எனவும் மேலும் தெரிவித்தனர்.