குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தச் சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், 16 மீனவர்களும் இதே குற்றத்தை மீளவும் செய்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கோடிட்டுக்காட்டினார்.
அத்துடன் படகுகளைப் பறிமுதல் செய்வதா அல்லது தண்டப் பணத்துடன் மீளக் கையளிப்பதா என்ற கட்டளையை வழங்க வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீதிமன்று ஒத்திவைத்து.இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.
அத்துடன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு ஒன்றில் தொழிலில் ஈடுபட்ட மேலும் 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இரு தினங்களிலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் மூன்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்திய மீனவர்கள் 16 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை ஆராய்ந்த நீதிவான், இன்றைய தினம் 13ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்திய மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதியின் சார்பில் யாழ்ப்பாண அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வெளிநாட்டு வள்ளங்களில் தொழிலில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்று இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்திய மீனவர்கள் 16 பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.
“16 குற்றவாளிக்களுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதே குற்றச்செயலை 16 பேரும் மீளவும் செய்கின்ற போது, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
16 குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் தீர்ப்பளித்தார்.
மேலும் புதிய சட்டத்தின் கீழ் படகுகளுக்கு அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டப் பணம் அறவிடுவதா? அல்லது அரசுடமையாக்குவதா? என்ற கட்டளை ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் என நீதிமன்று வழக்கை ஒத்திவைத்தது.