குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் படகுகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதனால் கடல் மாசுபடுவதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் ஊர்காவற்துறை கடற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளது.
அதனால் அந்த படகுகள் பழுதடைந்து படகில் உள்ள இரும்புகள் துரு பிடித்து அவை கடலில் கலக்கின்றன. அத்துடன் படகின் இயத்திர பகுதிகளில் இருந்து வெளியேறும் , டீசல் மற்றும் ஓயில் என்பன கடலில் கலக்கின்றன இதனால் கடல் மாசுபடுகின்றன.
அதனால் அந்த படகுகளை மீள கையளிப்பதற்கு நாங்கள் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குகின்றோம். கடந்த காலங்களில் படகுகளை விடுவித்தால் அவர்கள் மீள எல்லை மீறுவார்கள் என படகுகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள வெளிநாட்டு படகுகளை ஒழுங்கு படுத்தல் சட்டத்தின் கீழ் எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுவதனால் , எதிர்காலத்தில் எல்லை மீறும் மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்.
அதனால் அவர்கள் வந்த படகினை மீள கையளிப்பத்தில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். அதேவேளை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவிக்கையில் ,
கடந்த காலத்தில் எல்லை மீறும் இந்திய மீனவர்களின் படகுகளால் எமது வலைகள் அறுக்கப்பட்டு , கடல் வளங்கள் அழிக்கப்பட்டு , எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. அதனால் பிடிபடும் படகுகளை விற்று அதனால் வரும் வருமானத்தில் எமக்கு நஷ்ட ஈடு தர கோரி இருந்தோம்.
அது எதுவும் செய்யப்படவில்லை. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தின் ஊடாக எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றோம்.
அதனால் எமது கடல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்றால் பிடிபட்ட படகுகளை அவர்களிடம் மீள கையளிக்க எமக்கு பூரண சம்மதமே என தெரிவித்தார்.