முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் இவ்வாரத்திலிருந்து செயற்படும் எனவும், அதற்கென இலங்கை சட்டக்கல்லூரிக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றக் கட்டடம் நேற்று இலங்கை கடற்படையினரால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஊழல் விசாரணைக்கான முதலாவது சிறப்பு நீதிமன்றத்தின் பணிகள் இவ்வாரமளவில் ஆரம்பிக்கப்படும். அதே போன்று மேலும் இரு ஊழல் விசாரணை நீதிமன்றங்களை அண்மைய காலத்தில் அமைக்கப்படும். தற்போது குற்றச்செயல்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால் கொலை, வன்புணர்வு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடந்த அரசாங்க காலத்தை விட தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளன. அத்தோடு அவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டனை வழங்கும் வீதமும் கடந்த அரசாங்க காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளது என தெரிவித்தள்ளார்.