500 நாட்களை கடக்கும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் –
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
500 நாட்களாக வீதியில் கிடக்கும் எங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தென்ன? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கேப்பாபுலவு மக்கள் இன்று (14) வீதியிலிறங்கி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுவீகரித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 501 ஆவது நாளாக இன்றும்(14) இராணுவ முகாமிற்கு முன்னால் தொடர்கின்றது.
நேற்று (13) இவர்களது போராட்டம் 500 ஆவது நாளை எட்டியிருந்தநிலையில் இன்று (14) காலை பத்து மணியளவில் மக்கள் தமது போராட்ட இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
500 நாட்களாக வீதியில் கிடக்கும் எங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் நாடாளு மன்றத்தில் இருந்தென்ன. .இராணுவமே அபகரிக்காதே அபகரிக்காதே எம் பூர்விக வாழ்விடத்தை அபகரிக்காதே. நல்லாட்சி அரசே மக்கள் பிரதிநிதிகளே சர்வதேசமே பூர்விக வாழ்விட மக்கள் வீதியில் கிடக்கும் விதியா நல்லாட்சியிலும் பூர்விக மக்கள் அகதி வாழ்வா?கதியற்ற நிலையா?. சர்வதேசமே நீயும் கண்மூடித்தனமா உன்னிடமும் நீதி இல்லையா?. சர்வதேசமே கண்மூடித்தனமா நல்லாட்சியே பூச்சாண்டி விளையாட்டா மக்கள் பிரதிநிதிகளே பம்மாத்து நடிப்பா?.அரசே சுரண்டாதே சுரண்டாதே எங்கள் பூர்விக வாழ்விடத்தை சுரண்டாதே. இராணுவமே எங்கள் பூர்விக வாழ்விடம் உன் பாட்டன் பூட்டன் கொப்பாட்டன் சொத்தா? என்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமது பூர்விக காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்த மக்கள் நாம் எமது காணிகளுக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்;படும் விபரீதங்களுக்கு எம்மை 500 நாளாக வீதியில் வைத்திருந்த அரசும் அரசியல் தலைமைகளும் சர்வதேசமுமே பொறுப்பு கூறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.