Home இலங்கை விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்…

விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்…

by admin


விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும்.

அதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகளின் வாயை அடைக்க இது உதவும். கட்சி விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று காட்ட இது உதவும். அதே சமயம் விஜயகலா தனது காலைச் சுற்றிக் கொண்டே வருவார் என்பது ரணிலுக்கும் தெரியும். பதவி விலகியதால் எதிர்காலத்தில் அவருடைய நாடாளுமன்ற ஆசனம் பாதுகாக்கப்பட்டிருப்பது ரணிலுக்கு லாபம்தான். யாழ்ப்பாணத்தில் யு.என்.பி க்கு ஒரு ஆசனம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தனது வாக்காளர்கள் மத்தியில் ஐனவசியம் மிக்க ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்திருப்பது கட்சிக்கு எல்லாவிதத்திலும் லாபம்தான்.

அதே சமயம் விஜயகலாவின் பேச்சினால் அவருடைய கட்சி எதிரிகளுக்கும் லாபம்தான். குறிப்பாக மகிந்த அணிக்கு இனவாதத்தைக் கிளப்ப ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நியூயோர்க் ரைமசின் செய்தியில் சிக்குண்டிருந்த மகிந்த அணிக்கு அதிலிருந்து ஒரளவுக்கு மீள்வதற்கும் சிங்கள வெகுசனத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் விஜயகலா மறை முகமாக உதவி செய்திருக்கிறார். சிங்கள பொது உளவியலை இனவாதத்தை நோக்கித் திசை திருப்புவதில் மகிந்த அணி குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் விஜயகலாவின் பேச்சினால் அவருக்கும் லாபம் தான். அவருடைய கட்சிக்கும் லாபம் தான். அவருடைய கட்சி எதிரிகளுக்கும் லாபம்தான். ஆனால் எந்தத் தமிழ் மக்களை முன்வைத்து அவர் அவ்வாறு பேசுகிறாரோ அந்தத் தமிழ் மக்களுக்கு இதனால் லாபமா, நட்டமா?

நட்டம்தான். ஏனெனின் விஜயகலாவின் பேச்சு வெறும் பேச்சுத்தான். அது செயலுக்குதவாத ஒரு பேச்சு. புலிகள் இயக்கத்தை வைத்து தமிழ் தேசியக் கட்சிகள் அரசியல் செய்வது வேறு, விஜயகலா அதைச் செய்வது வேறு. அவர் அந்தப் பேச்சை விசுவாசமாகப் பேசவில்லை. ஏனெனில் அவர் ஒரு தமிழ்தேசியவாதி அல்ல. அவர் சார்ந்த கட்சியின் அரசியலைப் பொறுத்த வரை அவர் புலிகளின் அரசியலைப் பின்பற்ற முடியாது. புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கவும் முடியாது. ஆயின் தன்னால் முடியாத ஒன்றை தான் செய்யவியலாத ஒன்றை அவர் ஏன் பேசினார்? ஏனெனின் தனது வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு பேசினார். அவர் அதைப் பொய்க்குத்தான் பேசினார்.

அவர் மட்டுமல்ல தமிழ்த்தேசியவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் பலரும் பொய்க்குத்தான் புலிகளின் பெருமைகளைப் பேசிவருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஒழுக்கம், அரசியல் ஒழுக்கம், அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் அது தெளிவாகத் தெரிய வரும். தமிழ்த்தேசியம் எனப்படுவது அவர்கள் தேவைக்கு எடுத்து அணியும் ஒரு முகமூடிதான். இவ்வாறு தமிழ்த்தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை தமது வாக்காளர்களுக்கு நடிக்கும் போது தானும் ஏன் நடிக்கக் கூடாது என்று விஜயகலா யோசிக்கிறார். அங்கஜன் யோசிக்கிறார். வேறு பலரும் யோசிக்கிறார்கள்.

அதாவது தமிழ்த்தேசியம் கதைப்பதற்கும், புலிகளைப் போற்றுவதற்கும் அவற்றிற்கேயான ஒரு வாழ்க்கை ஒழுக்கம் தேவையில்லை என்ற ஒரு நிலை வந்துவிட்டது. சாதாரண சனங்களைத் திசை திருப்பவும் ஏமாற்றவும் யாரும் எதையும் கதைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது. என்பதால்தான் கடந்த ஆண்டு அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் மாணவர்களுடனான சந்திப்பில் பங்கு பற்றினார்.அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் போனார். முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் விஜயகலா அறிக்கை விட்டார். அங்கஜன் அறிக்கை விட்டார். டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல நினைவு கூர்ந்துவிட்டு வந்த மக்களுக்கு படையினர் தாக சாந்தி செய்வதற்கு குடிபானம் கொடுத்தார்கள். இது எதைக் காட்டுகிறது? தமிழ்ப் பொது உளவியலை கவர்ந்துவிட வேண்டும் என்று எல்லாத் தரப்புக்களும் புறப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் அதற்காகப் புலிகளைக் கையில் எடுக்கவும் நினைச் சுடர்களை கையிலேந்தவும் அவர்கள் தயார்.

கடந்த புத்தாண்டு தினத்திலன்று கேப்பாபுலவில் போராடும் மக்களுக்கு படைத்தரப்பு சிவில் உடையில் வந்து தின்பாண்டங்களை வழங்கியது. அப்படியென்றால் யாருக்கு எதிராக அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தமது காணிகளை விடுவிக்க கோரி அந்த மக்கள் 500 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அந்தக் காணிகளைப் பிடித்து வைத்திருக்கும் படைத்தரப்பு அங்கிருக்கும் வளங்களை அனுபவித்து வருகிறது. காட்டு மரங்கள், மணல், கடலேரியில் விளையும் றால், கால்நடைகள், தேங்காய்கள் என்று எல்லாவற்றையும் படையினர்தான் அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு காணி விடுவிப்புத் தொடர்பாக நடந்த ஒரு சந்திப்பில் படைத்தரப்பு அவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு பணம் கேட்டது. ஏனெனில் தாம் கட்டியெழுப்பி வைத்திருக்கும் பெருமளவான கட்டிடங்களை அகற்றவும் புதிய இடத்தில் கட்;டிடங்களைக் கட்டுவதற்கும் பெருந்தொகைப் பணம் தேவையாம. ஆனால் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி படை அதிகாரிகளைப் பாரத்துச் சொன்னார் ‘நீங்கள் பிடுங்கி எடுக்கும் தேங்காய்களை விற்றாலே போதும் அந்தக் காசை ஈடு செய்யலாம்’ என்று.

இது தான் நிலமை. கேப்பாபுலவில் போராடும் மக்களுக்கு விசுவாசமாக உதவ விரும்பினால் அவர்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும். மாறாக புத்தாண்டில் தின்பாண்டங்களை வழங்குவதால் மட்டும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பிவிட முடியாது. அதுபோலவே விஜயகலாவும் அங்கஜனும் தமது தலைவர்களுடன் வாதிட்டு பேரம்பேசி தமது மக்களுக்கு செய்யக் கூடியதைச் செய்ய வேண்டுமே தவிர புலிகளைப் போற்றி வாக்காளர்களை ஏமாற்றக் கூடாது. அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அங்கஜன் தனது கட்சித் தலைமைக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும். அவருடைய கோரிக்கையை கட்சித் தலைமை ஏற்க மறுத்தால் அவர் தனது பதவியை தனது மக்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும்.

விஜயகலா தனது தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இரண்டு வன்முறைகளை அடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு பிரதியமைச்சர். எனவே அரசாங்கத்தின் ஓர் அங்கம். தனது மக்களைப் பாதுகாப்பதற்காக தனது கட்சித் தலைமையோடு முட்டி மோதி தனது பதவியைத் துறந்திருப்பாராக இருந்தால் அதில் ஏதோ ஒரு தியாகம் உண்டு;. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாகப் புலிகளைக் கையில் எடுத்தார். ஏன் ?ஏனெனில் அவருடைய சலுகை அரசியலால் சமாளிக்க முடியாத அளவுக்கு சமூகத்தின் பொது உளவியல் கொந்தளிப்பாக உள்ளது என்று அவர் கருதியிருக்கலாம். இதிலவர் தனது சொந்த வாக்காளர்களுக்கும் விசுவாசமில்லை .புலிகள் இயக்கத்தின் அரசியலுக்கும் விசுவாசமில்லை.

எனவே யார் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள் இல்லை. மாறாக எல்லாருமே வாய்ச்சொல் வீரர்களாக மாறி வெற்றுப் பிரகடனங்களோடு பிரச்சனைகளைக் கடந்து போய் விடப் பார்க்கிறார்கள். விஜயகலா இதற்கு முன்னரும் பொறுப்போடு பேசியவர் அல்ல. இந்த முறையும் அவருடைய பேச்சில் புலிகளின் ஆட்சியைப் போற்றியதோடு விட்டிருந்தால பிரச்சினை வந்திருக்காது. மாறாக புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியதுதான் விவகாரம் ஆகியிருக்கிறது. அதைக் கூட அவர் வழமை போல வெற்றுப் பேச்சாகத்தான் பேசியிருக்கிறார். அதன் விளைவுகளைக் கணித்து திட்டமிட்டுப் பேசவில்லை. ஆனால் அதன் விளைவாகப் பதவியை இழந்தும் விட்டார். அவர் பதவி விலகிய அடுத்தடுத்த நாட்கள் யாழ்ப்பாணத்தில் முதலில் கறுப்பு வெள்ளையாகவும் பின்னர் பல வர்ணத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மகேஸ்வரன் உயிரைக்கொடுத்த ஒரு தியாகி. இவர் பதவியை இழந்த ஒரு தியாகி என்ற ஒரு பிம்பம் கட்டியெழுப்பப் படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரன் தேர்தல் கேட்டபோது புலிகள் இயக்கத்தின் பாடல்களைத் தனது பிரச்சார வாகனத்தில் ஒலிக்க விடுவார் என்று யாழ்ப்பாணத்து வாசிகள் கூறுவார்கள். மகேஸ்வரனைப் போலவே புலிகளைப் போற்றித் தனது அரசியல் அடித்தளத்தை விஜயகலாவும் பலப்படுத்த முயற்சிக்கிறார்.

அது அவருக்கு நன்மை தரக் கூடும். ஆனால், அவரை நம்பி வாக்களிக்கப் போகும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தன்னால் முடியாதஇ தான் என்றைக்கும் செய்ய விரும்பாத, தனது அரசியல் வழிக்கு முரணான ஓர் அரசியலை போற்றுவதன் மூலம் அவர் தனது சிங்கள எஜமானர்களுக்குச் சேவகம் செய்கிறாரா? அல்லது தனது அப்பாவி வாக்காளர்களுக்கச் சேவகம் செய்கிறாரா?

அவர் இப்படி புலிகளைப் போற்றுவதை ஒரு வாக்குவேட்டை உத்தியாகப் பயன்படுத்துவதற்கு யார் காரணம்? செயலுக்குப் போகாத பிரகடனங்களையும் அறிக்கைகளையும் வெளிவிடும் வாய்ச்சொல் வீரர்களான எல்லாத் தமிழ் தேசிய அரசியல் வாதிகளும் தான். இவ்வாறு வாய்ச்சொல் வீரர்கள் நிறைந்த ஓர் அரசியல் அரங்கில் விஜயகலா தானும் ஏன் அப்படியொரு வாய்ச்சொல் வீரராக இருக்கக் கூடாது என்று யோசிக்கிறார். தங்களைத் தமிழ் தேசியவாதிகளாக கூறிக்கொள்பவர்கள் தமது இலட்சியத்துக்காகவும் கொள்கைகளுக்காகவும் தியாகம் செய்யத் தயாரற்ற ஒரு வெற்றிடத்தில் தான் விஜயகலா தனது பதவியை இழந்த தியாகி என்று வேடம் போட முடிகிறது.

2009 மே மாதத்திற்குப் பிறகு தமிழ் அரசியலில் கதைகாரர்களே அதிகரித்து வருகிறார்கள். செயல்வீரர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். அல்லது கொள்கைக்கு உண்மையாக இருப்பவர்களால் சிறுதிரள் மக்கள் அரசியலைத்தான் செய்ய முடிகிறது. படையினருக்கு எதிரான போராட்டமாகட்டும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகட்டும் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் போராட்டமாகட்டும், உள்ளுரில் நிகழும் அநீதிகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான போராட்டமாகட்டும் எல்லாப் போராட்டங்களிலும்; அநேகமாக சிறுதிரள் மக்களே கலந்து கொள்கிறார்கள.; உண்மையானவர்களால் மக்களுக்கு விசுவாசமானவர்களால் ஏன் பெருந்திரள் மக்கள் அரசியலை முன்னெடுக்க முடியாதிருக்கிறது?

இந்த வெற்றிடத்தைத்தான் வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். படையினரின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பயன்படுத்தி வருகிறது. படைப் புலனாய்வுத்துறை பயன் படுத்தி வருகிறது.நுண்கடன் நிதி நிறுவனங்கள் பயன் படுத்தி வருகின்றன. இந்த வெற்றிடத்துள் தமிழ் அரசியலில் வாய்ச்சொல் வீரர்களின் கை மேலோங்கி வருகிறது. இதில் ஆகப்பிந்திய வெளியீடே விஜயகலா.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More