பாரிய இராணுவ முகாம் அமைக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
Jul 17, 2018 @ 22:22
யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றமை உண்மையே. ஆனால் அதற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இதுவரையில் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.
கோட்டை பகுதி யுத்த காலத்தின் போது இராணுவ வசம் இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கோட்டையை விட்டு பெருமளவான இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர்.
இருந்த போதிலும் அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து அதனுள் சுமார் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான இராணுவத்தினர் கோட்டைப்பகுதிக்குள் நிலை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளனர். அது தொடர்பில் கேட்ட போதே தொல்லியல் திணைக்கள அதிகாரி அவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில், கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினர் அனுமதி கோரி இருந்தனர். அதற்கான எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. தற்போது இராணுவத்தினர் முகாம் அமைப்பதாக கூறப்படும் செய்தி , இராணுவத்தினர் தாம் இருந்த மினி முகாமை மாற்றி வேறு இடத்தில் அமைக்கின்றனர்.
கோட்டைக்குள் இராணுவத்தினர் மினி முகாம் அமைத்திருந்த கட்டடத்தை கையளிக்க கோரி இருந்தோம். அதானால் அந்த கட்டடத்தை எம்மிடம் கையளித்து விட்டு அருகில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஏற்கனவே இராணுவ தரப்பினருக்கு சொல்லப்பட்டு உள்ளது. மிக குறைந்த அளவிலான இராணுவத்தினர் தங்கும் மினி முகாம் ஒன்றே கோட்டைக்குள் இருக்கலாம் என அதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம் ஒரு மினி முகாமே என தெரிவித்தார்.