குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதி மோசடிக் குற்றச்சாட்டு வழக்குகள் இரண்டில் நீதிமன்றில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று தீர்ப்பளித்தது.
குறித்த இரண்டு வழக்குகளிலும் எதிரிக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. எதிரி தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும். என நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இருவரை வெளிநாடு அனுப்புவதாகத் தெரிவித்து ஹட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் பணம் பெற்றுள்ளார். அவருக்குரிய பணத்தை வங்கியில் வைப்பிலிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரும் நீண்ட நாள்களாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதனால் பணத்தை வழங்கிய இருவரும் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைக் காவல் பிரிவில் முறைப்பாடுகளை வழங்கினர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து பணத்தைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் அந்தப் பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், முறைப்பாட்டாளர்களுக்கான பணத்தை தவணை அடிப்படையில் மீளச் செலுத்துவதாக அந்தப் பெண் நீதிமன்றில் இணக்கப்பாட்டுக்கு வந்தார்.
இவ்வாறு மன்றில் வழங்கிய வாக்குறியை மீறி அவர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார்.எதிரிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடச்சியாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சுமார் 5 வருடங்களின் பின் அந்தப் பெண் கடந்த வாரம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லையில் கைது செய்யப்பட்டார்.
அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல் வழங்கியது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அந்தப் பெண் இன்று முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலையாகாமல், மன்றுக்கு வழங்கிய வாக்குறுதியை மதிக்காமல் செயற்பட்டதாக அந்தப் பெண்ணை நீதிவான் கண்டித்தார். அத்துடன், அவர் மீதான குற்றங்களுக்கு தண்டனைத் தீர்ப்பை நீதிமன்று வழங்கியது.