ராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கிணறு அமைப்பதற்காக தோண்டியபோது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோது தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஈழப் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
ஆயுதக் குவியலிலிருந்து 5,500 எல்என்ஜி ரக துப்பாக்கி குண்டுகள், 4,928 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டுகள், 400 இயந்திரத் துப்பாக்கி குண்டுகள், டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்யும் சிலாப் 199, ராக்கெட் லான்சர் பொறிகள் 20, கையெறி குண்டுகள் 15, வயர் ரோல்கள் 8, கன்னி வெடிகள் 2, எக்ஸ்புளோசிவ் மோட்டார் 1 ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
ஆயுதக் குவியல்களில் வெடிக்கும் தன்மைகளைக் கொண்டவற்றை மட்டும் எடிசன் வீட்டுத் தோட்டத்தில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது.
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிக்கும் சக்தியை இழந்த ஆயுதங்களை மட்டும் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழுவினர் முன்னிலையில் குறித்த ஆயுதக்குவியல்களை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினரால் அகற்றி சிவகங்கை மாவட்டம் மேலூரில் உள்ள ஆயுதக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது