நுண்கடன் காரணமாகவடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் தற்கொலைகள் பதிவாகி வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைப்போலவே அம்பாறை மாவட்டத்திலும் நுண்கடன் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் அக்கரைப்பற்று கிராமத்தில் ஒரு பெண் நுண்கடன் தொல்லையால் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான – 24 வயதுடைய நாகராசா பிரசாந்தினி என்பவரே நுண்கடன் அலுவலர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் உயிரை நுண்கடன் நிதி நிறுவனங்கள் பலியாக்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 55 தற்கொலைமரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.