பிராந்திய சுயாட்சியின் கீழ் சமஷ்டி முறையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே, ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர் தரப்பு அரசியலின் அடிப்படை நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அல்லது அந்த இலக்கை அடைவதற்கு அவசியமான செயறபாடுகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது கேள்விக்கு உரியதாகியிருக்கின்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காககச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தனிநாடு கோரிய தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் மாகாண ஆட்சி முறையை நிராகரித்திருந்தார்கள்.
எனினும் இந்திய அரசாங்கம் ஆயுதமேந்திப் போராடிய அமைப்புக்கள் மீது செலுத்தியிருந்த அழுத்தம் காரணமாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது, ஆனால், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரம் பெற்றிருந்த மாகாணசபை ஆட்சி முறையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
இந்த விடயத்தில் ஏனோதானோ என்று, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அது நடந்து கொண்டது. ஆயுதப் போராட்ட நெருக்கடிக்குள் நடத்தப்பட்ட ஒரு தேர்தலின் மூலம், வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியிருந்த ஈபிஆர்எல்எவ், இந்தியாவின் உதவியுடன், பயனுள்ள வகையில் அதனைப் பயன்படுத்துவதற்கு முற்பட்ட போதிலும், அரசாங்கம் அதற்கு உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை. அது, பொறுப்பற்ற போக்கில் செயற்பட்டிருந்ததைக் கண்டித்து, தன்னிச்சையாக தனி ஈழப் பிரகடனத்தைச் செய்ததன் பின்னர் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியினர் அமைதிப்படையுடன் நாட்டைவிட்டு வெளியேறினர்.
இவ்வாறு கைவிடப்பட்ட மாகாண ஆட்சி முறையைத்தான், விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக செயலிழக்கச் செய்ததன் பின்னர், அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி இணைந்திருந்த வடக்கும் கிழக்கும், சுமார் 19 வருடங்களின் பின்னர் 2006 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின் உதவியுடன், இரண்டாகப் பிரிக்கப்பட்டது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, அவ்வாறு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட கிழக்கிற்கும், வடக்கிற்கும் இரண்டு வௌ;வேறு தேர்தல்களின் மூலம், இரண்டு மாகாண சபைகள் செயற்படுத்தப்பட்டன.
அந்த வகையிலேயே வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இந்த மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்வை வெற்றி பெறச் செய்திருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் மாகாணசபை முறைமையின் கீழ் தமிழ் மக்களுக்கான ஓர் அரசு உதயமாகியிருந்தது என்றுகூட பெருமை பாராட்டப்பட்டது. இந்த மாகாண அரசிடம்; தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்கள். உள்ளுர் அரசியலில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும்கூட இந்த மாகாணசபையின் மூலம் பல விடயங்கள் சாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றமும்
வடமாகாணசபை தேர்தலின் ஊடாக அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக மக்களால் அமோகமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். வடமாகாணத்தின் அரச நிர்வாகம் தமிழ் மக்களின் கைகளில் வந்தமையும், நீதித்துறையில் முதிர்ந்த அனுபவம் பெற்ற முன்னாள் நீதியரசராகிய விக்னேஸ்வரன் அதன் முதலமைச்சராகத் தெரிவாகியிருந்தமையும் தமிழர் அரசியலில் பெரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரும் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். கடும் போக்கைக் கொண்ட இலங்கை அரசாங்கத்திற்கு சட்டரீதியாக பல அழுத்தங்களைக் கொடுத்து, நியாயமான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு வடமாகாண சபை உறுதுணை புரியும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக நிலவியது.
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டத்தில், கிடைப்பதைப் பெற்று, குறைந்ததைக் கொண்டு, கூடிய நிலைமைகளை நோக்கி நகர்ந்து செல்கின்ற அரசியல் சாணக்கிய முறை பின்பற்றப்படவில்லை என்ற ஒரு பொதுவான குறை கூறப்பட்டுவது உண்டு, அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக செய்றபட்டு வந்த பல கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் உறுதியாகச் செயற்பட வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள். தொடர்ந்து, தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதைத் தவிர்த்து, ஒன்றிணைந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த ஒற்றுமை சாத்தியமாகவில்லை. பல கட்சிகளும் இணைந்த கூட்டு அமைப்பு மட்டுமே சாத்தியமாயிற்று. ஓர் அணி என்ற ஒற்றுமையான அரசியல் கட்டமைப்பு சார்ந்த செயற்பாட்டுக்கான வழி திறக்கவே இல்லை.
கூட்டு சேர்ந்த அணிகளுக்கிடையிலேயும் பல்வேறு பிச்சுப் பிடுங்கல்களே இருந்தன. பல்வேறு அரசியல் தந்திரோபாய நகர்வுகளின் மூலம், தமிழர் தாயகப் பிரதேசங்களாகிய வடக்கையும் கிழக்கையும் மீண்டும் ஒன்றிணைய விடாமல் தடுத்து, தமிழர் தாயகம் என்ற அந்தப் பிரதேசங்களின் வரலாற்று அந்தஸ்தை இல்லாமல் செய்வதற்காக அரசுகள் எடுத்த முயற்சிகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்னெடுக்க முடியவில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அந்தத் தாயகத்தில் பகிரப்படாத இறைமையுடன் கூடிய சுய ஆட்சி என்ற அரசியல் கனவு குறித்த பிரசாரங்கள் மாத்திரமே முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அந்த இலட்சியத்தையும், அந்த அரசியல் இலக்கையும் அடைவதற்கான இராஜதந்திரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த கோஷங்கள் இன்று வரையில் வெற்றுக் கோஷங்களாகவே காணப்படுகின்றன. அந்த அரசியல் இலக்கை நோக்கிய நகர்வில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் வலிந்து மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் பின்னர், இராணுவ மயமான ஒரு சூழலில் தமிழ் மக்களின் பாரம்பரிய குடியிருப்புக்கள் கிராமங்கள் இராணுவத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற உரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. மறுதலிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் தனித்துவமான தமிழ் முஸ்லிம் குடிப்பரம்பலை இல்லாதொழிப்பதற்காக இராணுவத்தின் நிழலில், சிங்களக் குடியேற்றங்களும்,
பௌத்த மதச் சின்னங்களை நிறுவும் பணிகளும் பரவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. வடமாகாணசபையும் அதற்காக அர்த்தமுள்ள வகையில் செயற்படவில்லை என்றே கூற வேண்டும்.
வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் ஒற்றுமையாக ஓர் அணியில் ஒன்று திரண்டிருககின்றார்கள் என்பதைக் காட்டுவதன் ஊடாக அரசாங்கத்;தினதும், சர்வதேசத்தினதும் பார்வையை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பக்கம் திருப்பி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. அதற்கமைய வடமாகாண சபையின் நிர்வாகம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்தார்கள்.
ஆனால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண நிர்வாகம் எவ்வாறு நடந்து கொண்டது? பல விடயங்களைச் சாதிக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் நீதியரசராகிய வடமாகாண முதலமைச்சர் எதனைச் சாதித்திருக்கின்றார்? -இந்த கேள்விகளுக்கு முகம் சுழிக்கத்தக்க வகையிலேயே பதில்கள் அமைந்திருக்கின்றன. வடமாகாணசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறியதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இதனால், மலைபோல தாங்கள் நம்பியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது அவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குழப்பங்களுக்குக் குறைவில்லை
தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். தங்களுடைய தேவைகளை முடிந்த அளவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே வடமாகாணசபைக்கான முதலமைச்சரையும் மற்றும் பிரதிநிதிகளையும் மக்கள் தெரிவு செய்து அனுப்பினார்கள். ஆனால் அந்தப் பிரதிநிதிகள் உளப்பூர்வமாக மக்களுடைய எதிர்பார்ப்புகனை சரிவர நிறைவேற்றியதாகத் தெரியவில்லை.
தேர்தலின் பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாத இறுதியில் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையிலும் மாகாணசபைக்குள் உறுப்பினர்களுக்கிடையிலான குழப்ப நிலைமை முடிவுக்கு வரவில்லை. மாகாணசபைக்குள் சென்றவர்கள் அங்கு அரசியல் அந்தஸ்துக்கும், பதவி நிலைகளுக்கும் தங்களுக்குள் முரண்பட்டு, மோதிக்கொண்டிருக்கின்றார்களே தவிர, மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்தி, அதற்கேற்ற வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லை.
வடமாகாண முதலமைச்சர் சாதாரணமானவர் அல்ல. கற்று உயர்ந்தவர். மக்கள் மத்தியில் பல வழிகளிலும் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறையில் உயர் பதவியை வகித்தவர். நீண்ட அனுபவமும், முதிர்ச்சியும் அவருக்கு உண்டு. ஆனால், அவசரமாகவும் அவசியமாகவும் தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்ற மனப்பதிவையே மக்கள் கொண்டிருக்கின்றார்கள்.
முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் மக்களுக்கான சேவைகள் எதனையுமே செய்யவில்லை என்று கூறுவதற்கில்லை பல காரியங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனை எவரும் மறுக்க முடியாது. ஆயினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னரும், இனவாத போக்கிலும், இன ஒடுக்கு முறையிலும் ஆழமாகத் தோய்ந்துள்ள அரசுகளின் நடவடிக்கைகளினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தன்முனைப்புள்ள அரசியல் நலன்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டியது அவசியம்.
அரசியலில் மாகாணசபையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் முடிந்தவரையில் அரசியல் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் சுய அரசியல் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் புறந்தள்ளி, மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். முன்னுரிமை அடிப்படையில் மக்கள் நலன்களுக்கே முதன்மை நிலை அளிக்கப்பட வேண்டியது முக்கியம்.
அரசியலில் சாதாரண புறச்சூழல் நிலவுமானால், தன்முனைப்பு பெற்ற அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தவறு காண முடியாது. ஆனால் மோசமான யுத்தத்திற்கும் யுத்தப் பாதிப்புகளுக்கும், யுத்தத்தின் பின்னரும் மோசமான அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருக்கின்றார்கள். தேசிய அரசியல் மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களுக்கும், மாகாண மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படமாட்டாதா என்று அந்த மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
காணிப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என மக்களை அன்றாடம் அழுத்திக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். மக்கள் தாமாகவே முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமைத்துவமும் இல்லை. அரசியல் ரீதியான சரியான வழிநடத்தலும் இல்லை.
இந்த நிலையில் கட்சி அரசியல் நலன்கள், தனிப்பட்டவர்களின் அரசியல் முன்னேற்றம், அரசியல் துறையிலான வளர்ச்சி என்பவற்றில் கவனம் செலுத்துவதைப் பொருத்தப்பாடுடைய நடவடிக்கையாகக் கருத முடியாது.
மோசமடைந்துள்ள நிலைமைகள்
மாகாணசபைக்கான தேர்தல்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மததியிலேயே நடத்தப்பட்டன. அந்தத் தேர்தல்கள் வெறுமனே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கருத முடியாது. அதிகாரக் குறைபாடுகளைக் கொண்டதாக இருந்தாலும், வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகார வல்லமை தலையீடு செய்கின்ற சூழலில், எஞ்சியுள்ள அதிகார வெளியில் தங்களால் இயன்ற நடவடிக்கைகளைமுன்னெடுத்திருக்க வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இயன்ற வகையிலான வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கவும் வேண்டும்.
அதிகாரப் பகிர்வையும் பகிரப்பட்ட இறையாண்மையையும் வேண்டிநிற்கின்ற ஒரு தளத்தில், மாகாணசபை நிர்வாக முறைமை பிராந்திய மட்டத்திலான பிரச்சினைகளுக்கும், தேசிய மட்டத்தில் படர்ந்துள்ள அந்தப் பிரச்சினைகளின் அம்சங்களுக்கும் தீர்வு காண்பதற்குரிய அவசியத்தை அடையாளம் காட்டத்தக்க வகையில் மாகாண சபையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இதன் மூலம் மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் உச்சகட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் அதிமுக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாகாணசபை பொறிமுறையின் கீழ் முடியாமல் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதன் ஊடாக மாகாணசபை நிர்வாகத்திற்கு அப்பால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியதன் அவசியம் நடைமுறைச் செயற்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மாகாணசபை நிர்வாக முறையில் ஆளுனரின் செயற்பாடுகள் எந்த அளவுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்பது செயற்பாடுகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு, அரசியலமைப்பு ரீதியாக அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். இது நடைபெறவில்லை.
மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் போதவில்லை என்பதை நிர்வாகச் செயற்பாடுகளின் ஊடாக வெளிப்படுத்தி, பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய பிராந்திய சுயாட்சியின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய செயற்பாடே அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கச் செய்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவும், அதுவிடயத்தில் சர்வதேசத்தின் ஆதரவை மேலும் வென்றெடுப்பதற்கும் ஊன்றுகோலாக அமைந்திருக்கும்
அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பற்கான இத்தகைய செயற்பாடுகளுக்கு; பதிலாக மாகாணசபையின் ஊடாக அளிக்கப்பட்ட அதிகாரங்களைக்கூட வடமாகாணசபை சரியான முறையில் செயற்படுத்தவில்லை. செயற்படுத்த முடியாமல் போயுள்ளது எனற அவச்சொல்லுக்கு இடமளித்ததாக நிலiமை மோசமடைந்துள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நிர்வாகம் நடைபெற்ற வடமாகாணசபையில் மாகாண அமைச்சர்களுக்கான அதிகாரங்களும், முதலமைச்சருக்கான அதிகாரங்களும் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற தேவை அரசியல் அரங்கில் உணர்த்தப்படவில்லை. மாறாக அந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்த முடியாதவர்களாகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என்ற வெட்கக்கேடான நிலைமையை வெளிப்படுத்துகின்ற நடவடிக்கைகளே இடம்பெற்றிருக்கின்றன.
முதலமைச்சர் தனது அதிகாரங்களை முடிந்த அளவில் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கின்றார். அவரால் முன்னெடுக்கப்பட்ட பல கைங்கரியங்களுக்கு மாகாணசபையில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாமல் இருக்கின்றது என்பது வெளிக்கொணரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஆளும் கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளே முதலமைச்சரைப் பதிவியில் இருந்து தூக்குவதற்காக ஆளுரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளிக்க வேண்ய அளவுக்கு நிலைமைகள் தாழ்ந்து போயிருந்தன. அது மட்டுமல்லாமல் அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியமையும், அதுவிடயத்தில் நீதிமன்றம் எடுத்த முடிவு தொடர்பில் மாகாணசபைக்குள் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆளும் கட்சியைச் சேர்ந்த பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிளவுபட்டு பிரிந்து சென்று சபை நடவடிக்கைகளை புறக்கணிக்க, சரி அரைவாசி அளவில் எஞ்சியிருந்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மாகாணசபைக்கு உடனடியாக அமைச்சரவை ஒன்று அவசியம் அதனை நியமிப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேடிக்கையான நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே பிளவுபட்டு போயுள்ளது. இந்த நிலையில் மாகாணைசபைக்குள்ளேயும் அது பகிரங்கமாகப் பிளவுபட்டு வாக்களித்த மக்களினால் வழங்கப்பட்ட ஆணைகளை மீறிச் செயற்பட்ட நிலைமை உருவாகி இருக்கின்றது.
அரசியலமைப்பு ரீதியாக மாகாணசபையின் செயற்பாடுகளும், ஆளுனரின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களுக்கு அவசியமான சேவைகளை முன்னெடுக்கவும் முடியாதுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்குப் பதிலான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட மாகாணசபையையே சரியான முறையில் நிர்வகிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற அவப்பெயரைச் சம்பாதிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.
வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் அந்த சபையின் நடவடிக்கைகளை முற்று முழுதாக முடக்குவதற்குரிய ஆபத்தான நிலையை இந்த நிலைமைகள் உருவாக்கியிருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது. அழுத்திக்கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்பட்டால், அவர்களின் அடுத்த கட்ட அரசியல் நிலைமை மிக மிக மோசமானதாகவே அமையப் போகின்றது என்பதற்கான அபாய அறிவிப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.