குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
புகையிலையை தடை செய்வதானால் புகையிலையை வாழ்வாதாரமான நம்பியிருக்கின்ற மக்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது துறைசார் ரீதியான முன்னனேற்ற விடயத்தில் விவசாயம் குறித்து கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் போது யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் தலைவர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்வாதாரப் பயிராகவே புகையிலை காணப்படுகின்றது. ஆனால் தற்போது அந்தப் பயிரைத் தடை செய்வது குறித்து பேசப்படுகின்றது. மாவட்டத்தில் 20 வீதமான நிலப்பரப்பில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் புகையிலையை தடை செய்வதானால் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்ற அபாயம் காணப்படுகின்றது.
இந்தப் புகையிலையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்கு இதுவரையில் மாற்றுப் பயிர் குறித்தோ அல்லது மாற்று வழிகள் குறித்தோ உறுதியான எந்தவித அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை. இவ்வாறிருக்கையில் இதனை திடிரென தடை செய்தால் இதனை நம்பியிருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் என்னவாகுமென்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாற்றுப் பயிர்கள் என்ற விடயத்தில் புகையிலைக்கு மாற்றாக வேறு பயிர்களை தெரிவு செய்கின்ற போது அதற்கான சந்தை வாய்ப்புக்கள் குறித்தும் ஆராய வேண்டும். இவ்வாறு ஏதுவுமே செய்யப்படாமல் தடை செய்தால் அதனை நம்பியுள்ள மக்களின் நிலை பரிதாபமானதாகவே அமையுமென்றும் சுட்டிக்காட்டினார். ஆகவே புகையிலைக்கு மாற்று வழிகளை அனைவரும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை விவசாய காணிகளில் பாரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதில் பலது அனுமதி இல்லாமலே அமைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் அருகி போகின்றது. ஆகவே விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.