நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன். இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும்.
விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை, கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள். வந்திட்டுப் போறியள். வரேக்கை கொண்டு வந்து சொக்கிலேட்டைக் குடுக்கிறியள், காசைக் குடுக்கிறியள், போனைக் குடுக்கிறியள்.. அதோடை முடிஞ்சிது எண்டு நினைக்கிறியள். அதுக்குப் பிறகுதான் பிரச்சினையே தொடங்கிது. அவையிட்டை நீங்கள் விட்டிட்டுப் போற சில கிளிச கெட்ட பழக்கத்தை மறந்து போயிடுறியள்…
எல்லாரும் நல்லது நடக்க வேணும் எண்ட அவாவிலைதான் எல்லாத்தையும் செய்யிறம். எங்கடை தேசம், எங்கடை இனசனம், எங்கடை கோயில், எங்கடை வாசிகசாலை, எங்கடை பள்ளிக்குடம் எண்டு எல்லா ம் எங்கடை எண்ட எண்ணத்தோடை நீங்கள் அண்டையிலைபோய் இருக்கிறது எனக்கு நல்லா விளங்கும். இருந்தும் “செய்வன திருந்தச் செய்” எண்ட ஒரு பழ மொழி இருக்கிதெல்லே? அதைச் சரியா விளங்கிக் கொள்ள வேணும். “பாத்திரம் அறிஞ்சு பிச்சை இடு” எண்டும் ஒரு பழஞ்சொல் இருக்கு. பிழையா ஒண்டைச் செய்யிறதாலை வாற பிரச்சினை கனக்க.
தோதில்லாதது ஒண்டைச் செய்யேக்கை வாற பிரச்சினை என்னெண்டு தெரியுமே? முன்னம் இலங்கையிலை ஒரு லொத்தர் சீட்டு “சியவச” எண்டு இருந்திது. அப்ப அது ஐம்பது சதம். லொத்தர் சபையாலை கொண்டு வந்து சந்தேக்கை வித்தவங்கள். எங்கடை குருசாமி அண்ணை ஒரு கயிட்டப்பட்ட ஆள். கீரைப்பிடி விக்க கொண்டு சந்தைக்குப் போனவர். மனுசன் சும்மா வந்திருக்கலாம். ஆசை ஆரை விட்டிது. எல்லாரும் எடுக்கினமெண்டிட்டு குருசாமி அண்ணையும் ஐம்பது சதத்தைக் குடுத்து ஒரு சீட்டை வாங்கினார். அந்த ஆளின்ரை கெட்ட காலத்துக்கு அது விழுந்திட்டுது.
அப்ப அந்தச் சீட்டு விழுந்தா முதல் பரிசு ஒரு லட்சம் காசு இல்லாட்டி ஒரு பேர்ஜோ 404 கார்.குருசாமி அண்ணை தமையனையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போய் லொத்தர் சபையிலை கொண்டு போய் சீட்டை நீட்டின உடனை அவங்கள் கேட்டாங்களாம் கார் வேணுமோ இல்லாட்டிக் காசு வேணுமோ எண்டு.குருசாமி அண்ணை முன்பின் யோசியாமல் சொன்னராம் கார் எண்டு. தமையன் கார் வேண்டாம் எண்டு அந்தாளுக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்லியும் அந்தாள் கேக்கேல்லை.
கார் வேணும் எண்டு கையெழுத்து வைச்சுக் குடுத்தால் அடுத்த பிரச்சினை காரைக் கொண்டு வரப் பெற்றோல் அடிக்கிறது எப்பிடி எண்டு. றைவருக்குப் பிரச்சினை இல்லை. குருசாமியின்ரை தமையன் ஆஸ்பத்திரியடியிலை ரைக்ஸி வைச்சிருக்கிறவர் எண்ட படியாலை லைசென்ஸ் எல்லாம் இருந்திது. உடனை இரண்டு பேரும் ஓடிற் கந்தோருக்குப் போய் அங்கை வேலை செய்யிற ஒரு மருமேன் முறையான ஆளைப் பிடிச்சுப் பெற்றோலுக்கக் காசு வேண்டிக் கொண்டு வந்து காரை ஊருக்குக் கொண்டு வந்து அது நிக்க எண்டு ஒரு கிடுகாலை கொட்டில் போட்டு, அதை மூடிக்கட்ட எண்டு துணி தைச்சு எல்லாம் ஒரு ஆயிரம் மட்டிலை செலவாப்போச்சு.
கிடந்த போயிலைப்பாடத்திலை ஒரு பங்கை வித்தாச்சு. பிறகும் அப்பிடி இப்பிடி எண்டு காருக்குச் செலவு ஒரு கணக்கு வந்திட்டுது. முழுப் போயிலைப் பாடத்தையும் வித்தால் இப்ப சீவிக்க எண்டு குருசாமியின்ரை கையிலை ஒரு சதமும் இல்லை. இதுக்கை கொழும்பாலை காரைக் கொண்டு வந்த உடனை , ஊரிலை உள்ள ஒரு வியாபாரி காரை ஒண்டகால் கேட்டவர். “உனக்குத் தரவோ காரைக் கொண்டந்தனான். என்னைப் பொறுத்தவரை அது ஐம்பது சதத்துக்குத்தான் நான் வேண்டின்னான். அது கிடக்கட்டே,” எண்டு இறுமாப்பாச் சொல்லிப் போட்டார்.
கடைசியா மழையாலை காரின்ரை அடித் தகடு உக்கிப் போனப் பிறகு குருசாமி விக்க வெளிக்கிட்டவர். காரை வேண்ட ஒரு தரும் இல்லாமல் “தாறதைத் தா” எண்டு ஒரு மெக்கானிக்கைப் பிடிச்சுக் குடுத்து வாங்கின காசிலை பட்ட கடனிலை காவாசியைத்தான் குருசாமி குடுத்தவர்.அப்ப அதிஸ்டம் எண்டு வாறதெல்லாம் அதிஸ்டம் இல்லை. அதோடை “தன்னை அறிஞ்சுதான் தானத்தையும் ஏற்கவேணும்” எண்டு அப்பு அடிக்கடி சொல்லுறவர். இப்ப இதை ஏன் சொன்னனான் எண்டு அடுத்த சனிக்கிழமையும் படியுங்கோ. அப்ப தெரியும். வாறன்….
– “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்