149
யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
வர்த்தக நிலையங்களுக்கு வாள்களுடன் நுழைந்து கொள்ளையிடும் வாள் வெட்டுக்கும்பல்களினால் யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும், கொள்ளையர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் யாழ்.வர்த்தக சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
யாழில்.உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வாள்களுடன் உட்புகும் கொள்ளையர்கள் வாளினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால் அச்சத்தில் உறைந்துள்ள வர்த்தகர்கள் இரவு 7 மணிக்கு முன்னரே தமது வர்த்தக நிலையங்களை மூடி விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் காவற்துறையினர் கொள்ளையர்கள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களை விரைந்து கைது செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.
இதேவேளை எந்தவித அச்சமும் இன்றி யாழ்ப்பாணத்தை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில், அரச புலனாய்வுத் துறை, காவற்துறை, பாதுகாப்பு படையினர் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகங்கள் குடாநாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் சமூகசெயற்பாட்டாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
குறிப்பாக உலக அளவில் பலம்வாய்ந்த அமைப்பாக விளங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கைப் படையினர் மௌனிக்க வைத்தனர். விசேடமாக யாழ் குடா நாட்டில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவ பிரசன்னத்தையும், கிராமங்கள், நகரங்களை மையப்படுத்தி காவல் நிலையங்களையும் கொண்டுள்ள இலங்கைப் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி வாள்வெட்டுக் குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் சர்வ சாதாரணமாக எப்படி வலம் வர முடியும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Spread the love