Home இலங்கை தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன்

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன்

by admin

‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இதே கருத்துப்பட அமைச்சர் மனோகணேசனும் அண்மைக் காலமாகப் பேசி வருகிறார். முஸ்லிம் தலைவர்களைப் போல கூட்டமைப்பும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத் தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தொனிப்பட அவர் கூறியிருக்கிறார். அதே சமயம் கடந்த வாதத்திற்கு முதல் வாரம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ‘முதலில் அரசியற் தீர்வு பின்னரே அபிவிருத்தி’ என்று கூறியிருக்கிறார்

ஆளுனர் குரேயும் அமைச்சர் மனோகணேசனும் கூற வருவது இணக்க அரசியலைத்தான். அதற்கவர்கள் முஸ்லிம் தலைவர்களை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இணக்க அரசியல் என்பது என்ன? சம அந்தஸ்துள்ள தரப்புக்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து இணங்கி அரசியல் செய்வதுதான் அது. இங்கு சம அந்தஸ்துள்ள தரப்புக்களாயிருப்பது என்பது ஓர் அடிப்படையான முன் நிபந்தனையாகும். ஒருவர் மற்றவரை மதித்து பரஸ்பரம் நலன்களின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து இணங்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரம் அதற்கு இடம் கொடுக்குமா? இல்லை. தமிழ் முஸ்லிம் மலையகத் தலைவர்கள் அரசாங்கத்தை எதிர்க்காமல் அரசாங்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதுதான் இங்கு இணக்க அரசியல் எனப்படுகிறது. அதாவது கடலில் சிறிய மீன்களைத் தின்னும் பெரிய மீனின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு சிறிய மீன்கள் தங்களைச் சுதாகரித்துக் கொள்ளும் ஒரு நடைமுறைதான். ஒருவர் மற்றவரை மதிக்கின்ற ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற நிலையில் இங்கு இணக்கம் ஏற்பட முடியுமா?

இணக்க அரசியல் என்றதும் இலங்கைத் தீவில் முன்னுதாரணமாகக் காட்டப்படுவது முஸ்லிம் அரசியல் ஆகும். ஆனால் மலையக அரசியலை ஏன் ஒருவரும் முன்னுதாரனம் காட்டுவதில்லை? கடந்த பல தசாப்தங்களாக மலையகத் தலைவர்கள் அரசாங்கங்களோடு இணங்கிச் சென்று சாதித்தவை எவை? முஸ்லிம்களின் விடயத்தில் முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையை அரவணைக்க வேண்டிய தேவை கொழும்புக்குண்டு. இனப்பிரச்சினையின் விளைவாகத்தான் முஸ்லிம் இணக்க அரசியல் ஒப்பீட்டளவில் வெற்றி பெற முடிந்தது. மாறாக முஸ்லிம்களை இச்சிறு தீவின் சம அந்தஸ்துள்ள சகஜீவிகளாகவும் சக நிர்மாணிகளாகவும் சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் அல்ல. எனவே இலங்கைத்தீவின் அரசியல் கலாசாரத்தைப் பொறுத்தவரை இணக்க அரசியல் எனப்படுவது பிரயோகத்தில் சுதாகரிப்பு அரசியல்தான் அல்லது முகவர் அரசியல் தான். அதாவது அரசாங்கத்தின் முகவராகச் செயற்படுவது. மாறாக தனது மக்களின் மதிப்புக்குரிய பிரதிநிதியாக, தமிழ் அரசியல்வாதி ஒருவர் கொழும்பில் சம அந்தஸ்துடன் விட்டுக்கொடுத்து ஏற்படுத்தும் ஓர் இணக்கம் அல்ல.

இங்கு மேலும் ஓர் உதாரணத்தைக் கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வன்னியில் உள்ள ஓர் அரசியல் ஆர்வலர் என்னைச் சந்தித்தார். ஊரில் மிகவும் செல்வாக்குள்ள அவரை தென்னிலங்கை மையக்கட்சி ஒன்று அணுகியிருக்கிறது. அக்கட்சியுடனான பேச்சுக்களின் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அவர்கள் என்னை அமைப்பாளராக இருக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் அமைப்பாளருக்குரிய அதிகாரத்தையும் அந்தஸ்தையும் தரத்தயாரில்லை. அந்தக்கட்சியின் அமைப்பாளராக எனது பிரதேசத்தில் எனது மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பதற்கு உரிய ஏற்பாடு எதுவும் இல்லை. எங்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். கை குலுக்குவோம் வாருங்கள் என்கிறாரகள். ஆனால் இரண்டு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு கை குலுக்கக் கேட்கிறார்கள். குறைந்தது ஒரு கையையாவது விரிக்கலாம்தானே? அவர்களுக்குத் தேவைப்படுவது முகவர்கள்தான். அமைப்பாளர்கள் அல்ல’ என்று அவர் என்னிடம் சொன்னார்.

அண்மை வாரங்களாக விஜயகலாவிற்கு நடப்பவற்றையும் இங்கு சுட்டிக்காட்டலாம். விஜயகலா புலிகளைப் பற்றிப் பேசியது பொய், அவர் புலிகளுக்கு விசுவாசமில்லை. ஆனால் தனது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கு அது அவசியம் என்று அவர் கருதியிருக்கலாம். தனது வாக்காளர்களின் பொது உளவியலைக் கவனத்திலெடுத்து ஒரு தமிழ்த்தலைவர் பொய்ப் பிரகடனங்களைக்கூடச் செய்ய முடியாத அளவுக்குத் தான் வடக்கில் முகவர் அரசியல் காணப்படுகிறது. அதாவது மெய்யான இணக்க அரசியலுக்குரிய ஓர் அரசியற் கலாச்சாரம் இலங்கைத் தீவில் கிடையாது. மாறாக சரணாகதி அரசியல் அல்லது முகவர் அரசியல் தான் இங்கு உண்டு. பெரிய மீன், சிறிய மீனை விழுங்கிக் கொண்டிருக்கும் வரை இரண்டுக்குமிடையே சமத்துவமும் சம அந்தஸ்தும் இருக்காது. மாறாக சின்ன மீன்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு சின்ன மீன்களும் பெரிய மீனும் இச்சிறிய தீவின் சக நிர்மானிகள் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.

அண்மையில் விக்னேஸ்வரன் ‘முதலில் அரசியற் தீர்வு பின்னரே அபிவிருத்தி’ என்று கூறியதும் அதைத்தான். மெய்யான இணக்கஅரசியல் எனப்படுவது தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை ஏற்றுக் கொள்வதிலிருந்துதான் தொடங்குகிறது. விக்னேஸ்வரன் ஒரு முதலமைச்சராக, நிர்வாகியாக, தலைவராக கெட்டித்தனமாகச் செயற்படவில்லை என்று கூறுபவர்கள் அவர் தன்னுடைய இயலாமையை மறைக்க எதிர்ப்பு அரசியல் கதைக்கிறார் என்று விமர்சிக்கப் பார்க்கிறார்கள். மாகாணசபை எனப்படுவது சட்டவாக்க அந்தஸ்துள்ள ஒரு சபை, அதன் தலைவரான விக்னேஸ்வரன் கிழக்கில் பிள்ளையான் சாதித்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் விக்னேஸ்வரன் கூறுவது கொள்கை அடிப்படையிலும் சரி பிரயோக அடிப்படையிலும் சரி. ஏனெனில் அபிவிருத்தி எனப்படுவதே ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமைகளில் ஒன்றுதான். உரிமையில்லாத தூய அபிவிருத்தி அரசியல் என்று ஒன்று கிடையாது. அபிவிருத்தி சார் உரிமைகளின் ஒரு பகுதிதான் திட்டமிடும் உரிமைகளும். எனவே அபிவிருத்தி சார் உரிமைகனற்ற மக்களால் தமது தலைமுறைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துத் திட்டங்களைத் தீட்டவும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அவர்களால் முடியாது. எதை அபிவிருத்தி செய்வது? எங்கு செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாமும் அபிவிருத்தி உரிமைகள் தான். தனது நிலத்தின் மீதும் நிலம் சார் வளங்களின் மீதும் கடலின் மீதும் கடல் படு திரவங்களின் மீதும் காட்டின் மீதும் ஏனைய இயற்கை வளங்களின் மீதும் உரிமையற்ற ஒரு மக்கள் கூட்டம் அபிவிருத்தி தொடர்பாக முடிவெடுக்க முடியாது. எனவே உரிமைகளற்ற அபிவிருத்தி அரசியல் என்று ஒன்றே கிடையாது. அவ்வாறு உரிமையற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீது அபிவிருத்தித் திட்டங்களைத் திணிப்பதும் ஒடுக்குமுறையின் ஒரு வடிவம்தான். அம்மக்களுக்குச் சொந்தமான வளங்களை கோப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அனுமதிப்பதுதான்.

எனவே அபிவிருத்தி எனப்படுவது சலுகையோ சன்மானமோ அல்ல. அது உரிமை. சம அந்தஸ்தில்லாத தரப்புக்களுக்கிடையிலான இணக்க அரசியலால் அதை முன்னெடுக்க முடியாது. முகவர்களாலும் அதை முன்னெடுக்க முடியாது. முகவர்கள் உள்ளுர் எஜமானர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டு கோப்பரேற்றுக்களுக்கும் தரகர்களாகச் செயற்படுவார்கள். எனவே அவர்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தியானது வளச் சுரண்டலாகவும் இயற்கை அழிவாகவும் முடியும். அது அபிவிருத்தி; அல்ல. சுரண்டல்தான். கொள்ளைதான். கட்டமைப்பு சார் இனப்படுகொலைதான்.

எனவே ஓர் அபிவிருத்தித் திட்டத்தைத் தெரிவு செய்யும் போது அது அதன் மெய்யான பொருளில் நீண்டகால நோக்கில் அபிவிருத்தியா? அல்லது இயற்கை அழிவா? என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இருக்க வேண்டும். கடந்த ஆண்டு விக்னேஸ்வரனுடன் ஒரு சந்திப்பின் போது அவர் ஒரு விடயத்தைக் குறித்துப் பேசினார். மன்னாரில் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை அமைப்பதற்கு மாகாண சபையிடம் கேட்கப்பட்டதாகவும் தாம் அதை நிராகரித்து விட்டதாகவும் கூறினார். அத்திட்டம் முதலில் அம்பாந்தோட்டைக்கு கொண்டு வரப்பட்டது எனவும் அது சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது என்று அங்கு எதிர்ப்புக் காட்டப்பட்டதையடுத்து அது கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அம்பாந்தோட்டையில் கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை மன்னாரில் அமுல்படுத்த முற்பட்டிருக்கிறார்கள். அதை விக்னேஸ்வரன் எதிர்த்திருக்கிறார். ஆனால் வெளித் தோற்றத்திற்கு அவர் ஓர் அபிவிருத்தித் திட்டத்தை எதிர்க்கிறார் என்றே காட்டப்படும்.

இவ்வாறானதோர் பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் வரும் சமூகத்திற்கும் இயற்கைக்கும் தீங்கான திட்டங்கைள நிராகரிப்பதற்கு வேண்டிய உரிமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றே விக்னேஸ்வரன் கேட்கிறார். அவ்வாறான கூட்டுரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றே அவர் கேட்கிறார். அவ்வாறான ஒரு தீர்வை முன்வைக்காமல் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைக் குறித்தே அவர் கேள்வி கேட்கிறார்.

அதற்காக அவரைப் பிள்ளையானோடு ஒப்பிட முடியாது. பிள்ளையான் யார்? மகிந்த ஆட்சியில் கிழக்கில் அரசாங்கத்தின் முகவராகத் தொழிற்பட்டவர். அவர் ஓர் எதிர்ப்பு அரசியல் வாதியல்ல. முகவர் அரசியல்வாதி. தனது முகவருக்கு அவர் கேட்டதை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் அதைக்கூட அப்போதிருந்த அரசாங்கம் செய்யவில்லை என்று பிள்ளையான் ஒருமுறை குறைபட்டுக் கொண்டார். ஒரு பியோனை நியமிக்கவும் தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியதாக ஒரு ஞாபகம். தனது முகவரிற்கே ஒரு கட்டத்துக்கும் மேல் அதிகாரங்களை வழங்கத் தயாரற்ற தலைவர்களே தெற்கில் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் பிள்ளையானுடன் விக்னேஸ்வரனை ஒப்பிட முடியாது. விக்னேஸ்வரன் துலக்கமாகவும் கூராகவும் எதிர்ப்பு அரசியல் கதைக்கிறார். அவர் கதைக்க மட்டும்தான் செய்கிறார் என்றுதான் அவரை விமர்சிக்கலாம். ஆனால் அதற்காக அவரை அரசாங்கத்தின் முகவர்களோடு ஒப்பிட முடியாது.

எனவே அபிவிருத்தியா? தீர்வா? என்ற விடயத்தில் விக்னேஸ்வரன் கூறுவது சரி. ஆனால் அவர் எங்கே பிழை விடுகிறார் என்றால், அவருடைய எதிர்ப்பு அரசியல் அதிகபட்சம் அறிக்கை அரசியலாகக் காணப்படுவதுதான். இது முதலாவது. இரண்டவாது அவர் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை போதியளவுக்குத் தீர்க்கத் தவறிவிட்டார் என்பதுதான்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். ஒன்று நீண்டகாலத் தீர்வுக்குரியவை. மற்றது உடனடித் தீர்வுக்குரியவை. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நீண்டகாலத்துக்குரியது. அதே சமயம் போரின் விளைவுகளிற் பல உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய உடனடிப் பிரச்சினைகள். அவற்றுக்குரிய உடனடித் தீர்வுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார கொள்கைத்திட்ட வரைபை மாகாணசபை அதன் தொடக்கத்திலேயே உருவாக்கியிருந்திருக்க வேண்டும். இது தொடர்பில் விக்னேஸ்வரன் பதவியேற்ற கையோடு நான் எழுதியிருக்கிறேன். வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள். மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் கிட்டத்தட்ட சில மாதங்களே இருக்கும் ஒரு பின்னணியில் இதை நினைவூட்ட வேண்டியிருப்பது துயரமானது.

விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலை விமர்சிப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பான பரப்பு இது. எனினும் சம அந்தஸ்தில்லாத சரணாகதி அரசியலை அல்லது சலுகை மைய அரசியலை அல்லது முகவர் அரசியலை இதை வைத்து நியாயப்படுத்திவிட முடியாது. ஆளுநர் குரே தொழில் வழி அரசுத் தலைவரின் பிரதிநிதியாக அல்லது முகவராகச் செயற்படுபவர். அவர் இணக்க அரசியலைப் பற்றிப் பேசுவார்தான். ஆனால் மனோ கணேசன் அப்படிப்பட்டவர் அல்ல. தெற்கு மையத்திலிருந்து கொண்டு வட – கிழக்கு அரசியலைக் குறித்து அக்கறையுடன் வெளிப்படையாகப் பேசுபவர் அவர். மகிந்தவின் காலத்தில் அவர் காட்டிய துணிச்சலை தமிழ் மக்கள் மதிப்புடன் நினைவு கூர்வார்கள். கொழும்பு மைய அரசியலில் மனோகணேசனின் பாத்திரம் குறிப்பாகத் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழ்த் தலைவர்களில் அதிகம் வெளிப்படையாகவும் ஒளிவு மறைவின்றியும் அதே சமயம் கூராகவும் கருத்துத் தெரிவிப்பவர் அவர். தமிழ் முகநூல் பரப்பில் துணிச்சலோடும் ஜனநாயகப் பண்போடும் தனது பிரசன்னத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வரும் மிகச்சில அரசியல்வாதிகளில் ஒருவர். யாப்புருவாக்கம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு அதிகம் உண்மைகளைச் சொன்னவரும் அவர்தான். அண்மையில் கூட கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அவர் யாப்பைப் பற்றிப் பேசியிருந்தார். இத்தனைக்கும் அவர் ஓர் அமைச்சர். அரசாங்கத்தின் ஓர் அங்கமாயிருப்பவர். முஸ்லிம் தலைவர்களை முன்னுதாரணமாகக் காட்டி கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் இணையுமாறு அவர் கேட்கிறார். ஆனால் யாப்புருவாக்கம் பிழைத்து வருகிறது என்றும் அவரே கூறுகிறார்.

யாப்பை ஏன் மாற்ற வேண்டும்? விக்னேஸ்வரன் கூறுவது போல தீர்வை முதலில் கொண்டுவரத்தானே? தீர்வு வராது என்றால் என்ன பொருள்? தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்குச் சட்டப்படியான அந்தஸ்து கிடைக்காது என்பதுதானே? ஆயின் உரிமையில்லாத இடத்தில் எப்படி இணக்க அரசியல் சரிப்பட்டு வரும்? தமிழ் மக்களின் கூட்டுரிமையை அங்கீகரிக்க முடியாத ஒரு கூட்டரசாங்ககத்தின் அங்கமாய் உள்ள ஓர் அமைச்சர் யாப்பு முயற்சிகள் பிசகும் போது அரசாங்கத்துடன் மோத வேண்டும். அவர் தனது துணிச்சலையும் வெளிப்படைத் தன்மையையும் தமிழ் மக்கள் மீதான நேசத்தையும் நிரூபித்துக் காட்ட வேண்டிய இடம் அதுதான். மாறாக தமிழ்த் தலைவர்களை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று கேட்கலாமா?

அல்லது சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று கேட்க வேண்டுமா? தமிழ் மக்களை இச்சிறிய தீவின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளும் ஓர் உடன்படிக்கை எழுதப்படாத வரையிலும் தமிழ்த் தலைவர்களின் இணக்க அரசியல் எனப்படுவது அதிக பட்சம் ஒன்றில் முகவர் அரசியலாக இருக்கும் அல்லது சலுகை மைய அரசியலாகத்தான் இருக்கும்.

ஒரு புறம் உரிமைகளை வழங்கத் தயாரற்ற ஆனால் முகவர் அரசியலை ஊக்குவிக்கும் தென்னிலங்கைத் தலைவர்கள். இன்னொரு புறம் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும், உடனடிப் பிரச்சினைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து உரிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கத் தவறும் தமிழ் எதிர்ப்பு அரசியல்வாதிகள். இந்த இருவருக்குமிடையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ காணிக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தெருவோரங்களிலும், காட்டோரங்களிலும் 500 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More