குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்ல எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில் துபாய் உட்பட ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நபர்கள், சட்டரீதியாக தமது நாடுகளுக்கு திரும்ப, அடிப்படை கட்டணத்தை மாத்திரம் செலுத்தி நாடுகளுக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும். மேலும் விசா நடைமுறை சட்டங்களை மீறி தங்கியிருக்கும் நபர்கள் அபராத தொகையை செலுத்தாமல் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியும்.
தம்மிடம் செல்லுப்படியான கடவுச்சீட்டு இருந்தால், அதனை ஐக்கிய அரபு ராஜ்ஜிய அதிகாரிகளிடம் சமர்பிப்பதன் மூலம் தேவையான சலுகையை பெற முடியும். கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், அங்குள்ள இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடவுச்சீட்டு செல்லுப்படியாகும் காலம் முடிந்திருக்குமாயின் துபாயில் இருக்கும் இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியம் வழங்கியுள்ள இந்த பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.