குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட பகுதி மீனவர்கள் எதிர் கொள்ளும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று புதன் கிழமை(1) மன்னாரில் பேரணி இடம் பெற்றதோடு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம் பெற்ற குறித்த பேரணியில் மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபதி, மாத்தரை மாகாண சபை உறுப்பினர் ரத்தின கமமே,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டனர்.
குறிப்பாக வட பகுதி மீனவர்களாகிய தாங்கள் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அவர்களின் சட்ட விரோத மீன்பிடி முறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னிலங்கை மீனவர்களின் மிதமிஞ்சிய வருகை மற்றும் உள்ளூர் மீனவர்களால் மேற்கொள்ளப்படும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக சிறு கடலை நம்பி வாழும் பல ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களும் அவர்களை நம்பி வாழும் அவர்களின் குடும்ப உறவுகளும் மிகவும் துன்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்ற குறித்த பேரணியை தொடர்ந்து மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் மாவட்ட அரசாங்க அதிபர் கே.ஏ.மோகன்ராஸ் அவர்களிடம் மகஜர் கையிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.