உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க நீதிக்கான உயர் சபை (கொலிஜியம் ) வழங்கிய பரிந்துரையை முன்னர் ஏற்காத மத்திய அரசு தற்போது ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் சிரேஸ்ட வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க நீதிக்கான உயர் சபை கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது. எனினும் இந்து மல்கோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜோசப் பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்குமாறு கோரியிருந்தது.
இதனையடுத்து இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நிலையில் நீதிபதி ஜோசப் நிராகரிக்கப்பட்டமை அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இரண்டு முறை கூடிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு ஜோசப்பை மீண்டும் பரிந்துரை செய்திருந்த நிலையில் தற்போது மத்திய சட்ட அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமுல்படுத்தமையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் முடிவை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.