குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக 30 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக , யாழ்.மாநகர சபை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன. நல்லூர் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
மகோற்சவ காலத்தில் உள்நாட்டில் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஆலய சுற்றாடலில் குற்ற செயல்கள் இடம்பெறாதவாறும் , ஏனைய விடயங்களை கண்காணிக்கும் நோக்குடனும் 30 அதிசக்தி வாய்ந்த சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
அத்துடன் ஆலய சூழலில் மாநகர சபையின் சிறப்பு சேவை நிலையம், பரியோவான் முதலுதவி படை பிரிவு, செஞ்சிலுவை சங்கம், சாரணர்களின் சேவை நிலையங்களும் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட உள்ளன.
இதேவேளை பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் ஆலய சூழலில் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அத்துடன் ஆலய சுற்றாடல் வீதிகளில் அதிக ஒளி தர கூடிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.