வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று மாலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களைசேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 2.45 அளவில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்பின்னர் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் பிணையில் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரவிகரன் விசாரனையின் பின் நீதிமன்றில் முன் நிறுத்தப்படுவார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
Aug 10, 2018 @ 11:56.
வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு காவற்துறையினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட அரச சொத்துக்களை சேதமாக்கிய குற்ற சாட்டின் கீழ் கைது செய்யபட்டுள்ளதாக முல்லைத்தீவு காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுமாறும், அவர்களின் சட்டவிரோத தொழில் நடவடிக்கையை தடுக்க கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பெரும் கண்டன போராட்டம் ஒன்றினை கடந்த 02ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தை சென்றடைந்து , அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதன் போது நீரியல் வளத்துறை அதிகாரிகள் தம்மை சந்தித்து தமது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மக்கள் குரல் எழுப்பினார்கள். அதன் போது அதிகாரிகள் மக்களை சந்திக்க வராததால் பொறுமை இழந்த மக்கள் காவல் தடைகளை மீறி அலுவலகத்திற்குள் உட்புக முயன்றனர்.
அதன் போது ஏற்பட்ட குழப்பத்தில் அலுவலகத்தின் கண்ணாடிகள், வேலிகள் என்பன சேதமடைந்தன. அது தொடர்பில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த முல்லைத்தீவு காவற்துறையினர் இன்றைய தினம் வெள்ளிகிழமை வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரனை நீரியல் வளத்துறை அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கு என அழைத்திருந்தனர். அந்நிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு சென்ற உறுப்பினர் ரவிகரனை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என காவற்துறையினர் தெரிவித்தனர்.