சுத்திவர நாசங்கள் நடக்கிறபோது “நாசம் அறுப்பான்” எப்பிடி பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறது? முடியல.. அதுவும் முல்லைத் தீவு அபிவிருத்தி ஒன்றியம் குரே ஐயாவை சந்திச்சு போட்டு, விட்டினமே ஒரு அறிக்கை, அத பாத்த உடன, பிளட் பிறசர் தலைக்கு அடிச்சிட்டுது…
“முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துகிறார்கள். எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது எமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை. எமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் நாம் மிகுந்த கவலையடைந்துள்ளோம்”என்டு குரே ஐயாவிட்ட கொம்ளையின் பண்ணிப் போட்டு வந்து பேப்பர்காரரிட்டயும் சொல்லிப் போட்டினம்..
அவை எங்கடை ஆட்களிட்ட சொல்லி இருப்பினம் அவை கணக்கெடுக்காம அரசியல் செய்யினம் எண்டு ஒன்றியக் காரர் சொல்லினம் போல.. சாந்தி அக்கா அந்த ஊர்காரி அவ பாளிமன்டில இருக்கா. புலியளை மனதார நேசிக்கிற ரவிகரன் அண்ணையும் அந்த ஊர்தான்.. ஏனுங்கோ உவர் விவசாய அமைச்சர் சிவனேசனும் முல்லைத்தீவார்தான்.. பெரிய தலையலே உங்க இருக்கேக்கே எங்கட வண்டவாளங்களை குரே ஐயாட தண்டவாளத்தில ஓட விடலாமோ?
முல்லைதத் தீவு, நாட்டில இப்ப கடைசி மாவட்டம் இனி பின்னால போறத்துக்கு இடம் இல்ல. யுத்தமும் சுனாமியும் வாரிச் சுருட்டிப் போட்ட இடமெல்லே.. கல்வி, சுகாதாரம், மருத்துவம், வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்பு, என்டு எல்லாத்திலயும் கடைசியில நிக்குது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் குறைவில்லை. போதாக்குறைக்கு கொக்கிளாய், நாயாறு, பக்கத்தில இருந்து மீன்பிடி, கனியவளம், காணி என எல்லாத்தையும் கொண்டு போறத்துக்கெண்டு தவமாய தவமிருக்கிறாங்கள் தெற்கு பக்கத்தார். ஆமிக்காரர் வேற, ஊரெல்லாம் நல்லெண்ணம் வளக்கிறது எண்டும், பண்ணையலில வேலை கொடுக்கிறம் எண்டும், புணர் வாழ்வில இருந்து வெளிக்கட்டவையை சுத்தி வளைச்சிருக்கினம்.
இதெல்லாம் தெரிஞ்சுகொண்டு கணக்கெடுக்காம எங்கட ஆட்கள் மெத்தனமா இருக்கினம். இந்த மெத்தனத்துக்கையும், பாதிக்கப்பட்டு இருக்கிற மக்களிட பலவீனத்துக்கையும், குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார் என்டுறதை நினைக்கேக் நாசம் அறுப்பானுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகுது.
எங்ட ஆக்கள் அரசியலில பிழைக்கு மேல பிழைகளை விட்டுக்கொண்டே போயினம்தான்.. செப்டம்பரில காத்துப்போற மாகாண சபைக்குள்ள எத்தினை குத்து வெட்டு. கோடு கச்சேரி என்டு ஏறி இறங்கிறாங்கள் கொஞ்சப்பேர். விக்கியின்ட மூக்கு போறதுக்காக இருக்கிற அதிகாரங்களையும் புடுங்கி குரே ஐயாவிட்ட குடுக்க துடிக்கிறாங்கள் கொஞ்சப் பேர்.
“வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? பயன்படுத்தியிருந்தால் இன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள்” என தவனாதன் அண்ணை கிழிக்கிற அளவுக்கு, ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி இருக்குது பிறகேன் நாங்கள் என்டு அலிக்கான் ஷெரிவ் நக்கல் அடிக்கிற அளவுக்கு மாகாண சபை நாத்தம் எடுக்குது…
இதெல்லாம் குரே ஐயாவுக்கும் அவற்ற பெரும் தலைவர்களுக்கு நல்லாத் தெரியும்.. இவங்கட தலையில நல்லா அரப்பு எலுமிச்சைங்காய் வைத்து தேச்சு முழுக வாக்கலாம் எண்டு..
புலியலை உடைச்சு எறிய வடக்கு கிழக்கு என்ட பிரதேச வாதத்தை தான் ரணில் ஐயா கையில எடுத்தவர். நீறு பூத்த நெருப்பாய் இருந்த பிரதேச வாதத்தை கருணா புலிகள் முரண்பாட்டுக்கை சொருகி எல்லாத்தையுமே நாசமாக்கியதை தெரிஞ்சு கொண்டும் இப்பிடி அரசியல் பித்தலாட்டம் பண்ணுறவங்களை என்ன செய்ய முடியும்?
பிரதேச வாதத்தால வடக்கு கிழக்கு முறிஞ்சுபோச்சு – புலிகள் சிதைஞ் போச்சினம்.. இப்ப ஒன்றாய் இருக்கிற வடக்கில கைய வைச்சிட்டாங்கள். யாழ்ப்பாணத்தார் வன்னியாரை ஒதுக்கினம் எண்டும், வன்னியின்ட அபிவிருத்தியில கவனம் இல்லை எண்டும் மற்ற மாவட்டங்களை குளப்ப போறாங்கள். முல்லைத் தீவு ஒன்றியத்தின்ட குற்றச்சாட்டுக்கு பின்னால அதுக்கான வேர்கள் முளைவிடுறதா நான் நினைக்கிறன்..
தவறுகள் இருக்குத்தான்.. அதுக்காக முள்ளிவாய்க்காலில விளக்கு கொழுத்தி அஞ்சலி செலுத்தாம அம்பாந்தோட்டையிலையே விளக்கு கொழுத்துறது… இனியும் காலம் தாழ்த்தினா விளையப் போறது நாசம்தான் சந்தேகம் இல்லை. சம்பந்தர் ஐயா, அவற்ற தலைமையில இருக்கிற கூட்டமைப்பு, அதில இருந்துட்டு வெளியால போய் நிக்கிற சுரேஸ் அண்ணை, தம்பி கஜன் பொன்னம்பலம், குருபரன் ஆக்களின்ட சிவில் சமூக அமைப்புகள், சமூக நலன் விரும்பிகள், மத்தியில கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கேட்கிற தேவா அண்ணை, கிளிநொச்சியல கெத்துக் காட்டுற சந்திரகுமார் அண்ணை, எல்லாரும் சேர்ந்து கவனம் எடுக்க வேணும்.
எல்லோரும் எண்டு கொஞ்சப் பேரை பின்னால் சேத்திருக்கிறான் நாசமறுப்பான் என்டு கொஞ்சப்பேர் முறுகிறது விளங்காமல் இல்லை.. ஆனால் தமிழருக்கு ஏதாவது நல்லது நடக்கப் போகுதென்டால், அதை குழப்ப தெற்கில இருக்கிறவங்கள், எப்பிடி எல்லோரும் ஒன்றா சேருராங்கள் என்டுறதை பார்த்தாவது சனங்களின்ட நல்ல விசயங்களுக்காவது ஒன்றா நிக்க பாருங்கோ…
அபிவிருத்தியை, வாழ்க்க்கையின்ட அடுத்த நாளின்ட நிலமை என்ன என, வாழ்க்கையோட போராடிக் கொண்டிருக்கின்ற, சனங்களின்ட அன்றாட பிரச்சனைகளை, வாழ்வுக்கும் உரிமைகளுக்குமான போராட்டத்தினை, எப்பிடி சமாந்தரமாக கொண்டு செல்லனும் எண்டு திட்டத்தை போடுங்க…
இல்லாட்டி “தென்னிலங்கையில் நீங்கள் பார்த்தீர்களானால் மக்கள் தமக்கு அபிவிருத்தி வேண்டி கல்வி வசதி வேண்டி நீர் வசதி வேண்டி வீதி செப்பனிட வேண்டும் என வேண்டி பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள். ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” எண்டு குரே ஐயா அறிக்கை விட்டு சனங்களின்ட மண்டையளுக்கை பூந்துடுவார்..
செப்டம்பரில மாகாண சபையை கலைச்சபிறகு எல்லாரும் அவரிட்ட தான் வரிசைகட்டி நிக்க வேணும் கண்டியலோ… அதுக்கு இப்பவே மெல்ல மெல்ல இத்திவாரத்தை ஸ்ரோங்கா போடுறாரு..வடக்கில இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிச்சு மேயப் போறாரு – போறாங்கள்.. என்ன செய்யப் போறியலோ எனக்கு தெரியாது.. விளங்கவும் இல்லை..
ஒவ்வொரு ஞாயிறும் வந்து நாசங்களை சொல்லி அறுக்கத்தான் இந்த நாசம் அறுப்பானால முடியும்….
விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..
யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….