இலங்கை தொடர்பான, இரண்டு அறிக்கைகள், அடுத்த மாதம் நடைபெற விருக்கின்ற ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்படவுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் 10 திகதியிருந்து 28 திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையின் 39ஆவது அமர்வின்போது, எழுந்தமானமான தடுப்பு பற்றிய செயற்குழுவின் அறிக்கையும், உண்மை நீதி, பரிகாரம் வழங்கள், மீளவும் இவை நடக்காது என்ற உறுதி வழங்கல் என்பன தொடர்பிலான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் கலந்துரையாடப்படவுள்ளன.
கடந்த வருடம் கட்டாயத் தடுப்பு மீதான ஐ.நா செயற்குழு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் பின்னர், இலங்கையில்; தனிநபர் சுதந்திரம் காணப்படுவதுடன் கணிசமான சவால்கள் உள்ளது எனவும் இது கட்டாயத் தடுப்புக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும் தெரிவித்திருந்தது. குறிப்பாக நிபுணர்கள், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் கண்டுள்ளனர் என்ற போதிலும் மனித உரிமைகள் தொடர்பில் 2017, 2018 தொடர்பில் இலங்கையின் கடப்பாட்டை நிறைவேற்ற அவசர நடவடிக்கை தேவை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அத்துடன், தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை சட்ட அமுலாக்க அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையினராலும் சட்டதுறை அதிகாரிகளாலும் மதிக்கப்படாது உள்ளதென நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை காவல் நிலையங்கள், சிறைச்சாலை, திறந்தவெளி முகாம்கள், நெறிபிறழ்ந்தோர், முதியோர் இல்லங்கள், மனநோய் நிறுவனங்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றில் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவை மட்டுமல்லாது அத்துமீறிய தடுத்துவைப்பு, தடுப்புக்கு எதிரான மாற்று இன்மை, காலங் கடந்த சட்டங்கள், ஒப்புதல் வாக்கு மூலத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் சீர்திருத்தங்கள் தேவையெனவும், நீதிமன்றச் செயற்பாடுகளின் அளவு கடந்த தாமதங்களால் சந்தேக நபர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும் முடிவின்றி அவர்கள் மறியலில் உள்ளமையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என எடுத்துக் கொள்ளல் இன்றும் பூரணமாக இல்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது