மஹிந்தவை பழிவாங்குவதாக தெரிவித்துக்கொண்டு, தற்போதைய அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினைத் தோண்டிக் கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அரசாங்கத்திற்கே எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் இதன் பின்னணியில் அரசாங்கத்தின் இராஜதந்திரங்களே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கம் தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ள நிர்வாகத்தின் காரணமாக இன்று பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர எனவும் இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தம்மீது குற்றம் சுமத்துவதிலேயே கவனம் செலுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆட்சியின் பலனை நன்கு அனுபவித்து விட்டார்கள் எனவும் கடந்த பெப்ரவரியில் இடம் பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பெறுபேறுகள் அரசாங்கத்திற்கு பாரிய பதிலடியினை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேசத்தின் குப்பையாக இன்று இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது எனவும் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அரசாங்கம் அதனை அமுல்படுத்தும் நோக்கத்திலே செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
எதிர்வரும் மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பொது எதிரணி வெற்றி பெறும் என்பதனை நன்கு அறிந்துள்ள அரசாங்கம் தற்போது தமக்கு எதிராக காய்நகர்த்தி வருகின்றது எனவும் அது அரசாங்கத்திற்கே எதிர் வினைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.