எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். என மகாவலி அதிகாரசபைக்கு எதிராக முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிவம் என்பவர் தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கேட்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் நாங்களும் நிலங்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கொக்குதொடுவாய் எனது சொந்த கிராமம். அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். எமக்கு சொந்தமான ஒரு காணி கொக்குதொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காணி கோட்டைக்கேணி பகுதியில் 2 ஏக்கர் காணி 30 வருடங்கள் நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் பராமரிக்க முடியாமல் காடாக மாறியுள்ள நிலையில் அது வனவள திணைக்கத்திற்குரிய காணியாக அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எரிஞ்சகாடு பகுதியில் எமக்கு கொடுக்கப்பட்ட நீர்ப்பாசன காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எமக்கு காணிகளை கொடுத்தார்கள் அந்த காணிகள் வெறும் உவர்க் காணிகள் அங்கு ஒரு போகத்தில் கூட நெல்லை அறுபடை செய்யவில்லை.
ஆனால் எங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருக்கும் சிங்கள மக்கள் குளத்திலிருந்து நீரை பெற்று வருடத்தில் 2 போகம் விவசாயம் செய்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்கிறோம்.
தொழில் செய்வதற்கு வசதியும் இல்லை. நிவாரணம், சமுர்த்தி போன்ற அரச உதவிகளும் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்பி நாங்கள் வாக்களித்தோம். இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் எதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம்? எங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பீர்கள் என நம்பியே அனுப்பினோம்.
ஆனால் நாங்கள் நம்பி வாக்களித்த வீடு இன்று பிரிந்து கிடக்கிறது. வீடு பிரிந்து கூரை பறந்து விட்டது. வீடு ஓட்டையாகிவிட்டது. ஒதுங்க நிழல் தேடுறோம். இனிமேலாவது எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்.
நாங்கள் நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை. உங்களைத்தான் இப்போதும் நம்பியிருக்கிறோம். இனிமேலாவது தீர்வினை பெற்றுக் கொடுங்கள் என்றார்.