இன்று நிலவும் அச்ச உணர்வு, இந்தியாவில் நெருக்கடி நிலவிய கால கட்டத்தில் கூட இருந்ததில்லை என வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களையும் வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ரொமிலா தாப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைது குறித்தும் நிலவுகின்ற சூழல் குறித்தும் முக்கிய விடயங்களை தெரிவித்தார்.
கைதுக்கான சம்பவம் இடம்பெற்று ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்கள் இல்லாத போதிலும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஸ்ட வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவை நேற்று புதன்கிழமை விசாரித்த நிலையில் இடைக்கால நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரையும் செப்டம்பர் 6-ஆம் திகதி வரை வீட்டுக்; காவலில் வைகுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க மகாராஷ்டிர அரசு முயல்வதாகவும், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்பதை தடுத்து, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்வதாவும் மனுதாரர் தரப்பு வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.