இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதை தடுக்கும் 35-ஏ சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது.
இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ – காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்பதுடன் அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்தால் அங்கு சொத்துரிமை கோர முடியாது என்வும் விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காஷ்மீர் அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் வழக்கு தொடர்ந்தவர்களின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
அவர்களின் கருத்தை இன்று பரிசீலித்த நீதிபதிகள் இவ்வழக்கி மறுவிசாரணையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்