இந்திய அரசாங்கமானது இலங்கையின் அபிவிருத்திக்கு என மொத்தம் அளித்துள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது மானியமாக வழங்கப்படுகின்றது. அதன் ஓர் கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் 150 மீன்பிடி படகுகளும் 150 மீன்பிடி படகு இயந்திரங்களும் 300 முல்லைத்தீவு மீனவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (08.09.2018 சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
2. இந்திய துணைத் தூதுவர் திரு பாலச்சந்திரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபினி கேதீஸ்வரன், இந்திய உயர் ஸ்தானிகம் கொழும்பின் ஆலோசகர் திரு சந்தோஸ் வர்மா, யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு நிறஞ்சன் கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மீனவப் பயனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
3. இங்கு உரையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபினி கேதீஸ்வரன் இந்திய அரசாங்கத்திற்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் பயனாளிகள் இம் மீன்பிடி படகுகளையும் மீன்பிடி படகு இயந்திரங்களையும் வேறு நபர்களுக்கு கையளிக்காது உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
4. தொடர்ந்து உரையாற்றிய இந்திய துணைத் தூதுவர் திரு பாலச்சந்திரன் இந்திய அரசாங்கம் வடமாகாணத்திற்கு வழங்கிய உதவிகளைப் பட்டியலிட்டதுடன் விசேடமாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி திட்டங்களான 70.96 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் மன்னாரில் மீன்பிடி படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டமை, 152 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் குருநகரில் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டமை ஆகியவற்றினைக் குறிப்பிட்டதுடன் அதன் அடுத்த கட்டமாக இவ் மீன்பிடி படகுகளையும் மீன்பிடி படகு இயந்திரங்களையும் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்திய அரசாங்கமானது மீனவர்களுக்கென பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்க தயாராக உள்ளதெனவும் கூறினார்.
5. நிகழ்வின் இறுதியில் தனது நன்றியுரையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் இந்தியாவுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் பயனாளிகள் படகுகளை கைமாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே இத்தகைய உதவித் திட்டங்களை மேலும் தொடர்ந்து பெற முடியும் என்று அறிவுறுத்தினார். மீனவப் பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகளையும் மீன்பிடி படகு இயந்திரங்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபினி கேதீஸ்வரன் மற்றும் இந்திய துணைத் தூதுவர் திரு பாலச்சந்திரன் ஆகியோர் இணைந்து கையளித்தனர். நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் காணொளி இதனுடன் இணைக்கப் பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதரகம்
யாழ்ப்பாணம்
ஊடக அறிக்கை