புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கை சீற்றம் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்ட போதும் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவிலேயே சென்னை நகரில் தான் வெள்ள நீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ள போதிலும் அவற்றை முறையாக பராமரிக்காமையினால்தான் 2015 ஆ-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும். இதனால் புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயரும். இதனால் சென்னை நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
நாகை மாவட்டத்துக்கு இவ்வாறு பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நில மட்டம் தாழ்ந்துவிடும். இதனால் கடல்நீர் எளிதில் உட்புகுந்து கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது