கடந்த 2007-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3-வது குற்றவாளியான தாரிக் அஞ்சுமுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2-வது கூடுதல் அமர்வு நீதிபதி டி. சீனிவாச ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25-ம் திகதி கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரு இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்தத் தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என 44 பேர் கொல்லப்பட்டனர், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து ஹைதரபாத் காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இன்னும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை செரப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில், கடந்த 4-ம் திகதி நீதிபதி சீனிவாச ராவ் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி இவர்களுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சும் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அறிவித்து, 10-ம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு்ளது.