குளோபல் தமிழச்செய்தியாளர்…
பூநகரி நாகபடுவன் கணேஸ் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் அத்துமீறி சிவில் உடையில் புகுந்த இராணுவ சிப்பாய் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இராணுவ சிப்பாய் ஒருவர் புகுந்துள்ளார். இதனை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்து, கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு திரண்ட அயலவர்கள் வீட்டுக்குள் புகுந்தவரை பிடி த்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து தான் வந்ததாகவும், தான் ஒரு சிப்பாய் எனவும் மடக்கி பிடிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து முழங்காவில் காவவற்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற காவவற்துறையினர் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர். இதேவேளை சம்பவம் குறித்து கணேஷ் குடியிருப்பு மக்கள் கூறுகையில்,
இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவை தொடர்பாக தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால் ஆதாரத்துடன் வாருங்கள் என கூறி எம்மை திருப்பி அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீட்டுக்குள் சிவில் உடையில் புகுந்த இராணுவத்தை சேர்ந்தவரை கையும் மெய்யுமாக பிடித்து ஆதாரத்துடன் காவவற்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் காணப்படும் இரணுவமுகாமினால் நாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றோம் எனவே மக்கள் குடியிருப்புக்குள் உள்ள இராணுவ முகாமை அகற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்கள்.