சனி முழுக்கு – 8 “பொஸிற்றிவ் பொன்னம்பலம்
கோயில் திருவிழா எல்லாம் முடிஞ்சு கொண்டு வந்திட்டுது. இனிமேல் நவராத்திரி, கந்த சஷ்டி, கௌரிக்காப்பு எண்டு விரத காலம் வரும். இனி மாரி மெல்ல மெல்லத் துவங்கிவிடும். அதைச் சொல்லுற மாதிரி இப்ப சாதுவா மழை தூறத் துவங்கிவிட்டுது. இனிமேல் அட்டையளுக்குக் குறைவிருக்காது. முத்தமெல்லாம் ஒடித் திரிவினம். போன மாதம் தமிழுக்கு ஆவணியோடை கலியாணவீடுகளும் ஓய்ஞ்சு போய்ச்சுது. இனி ஏதேனும் நடந்தால் ஐப்பசியிலைதான் நாளிருக்கு. அதுக்குள்ளை அவதிப்பட்டவை செய்வினம். இப்ப நாள், கோள் எண்டு பாக்கிற சம்பிரதாயங்களும் குறைஞ்சு கொண்டு போகுது. சாத்திரிமாரும், ஐயர் மாரும் தாங்கள் நினைச்சபடி தங்களுக்கேத்தமாதிரிச் சட்ட திட்டங்களை மாத்தி எங்களிட்டை இருந்த நல்ல விசியங்களை எல்லாம் சீரழிச்சுப் போட்டினம்.
இப்ப கலியாண வீடு ஒண்டு நடக்கிதெண்டு வைச்சுக் கொண்டால், முதலிலை எந்த மண்டபத்திலை நடத்திறதெண்ட யோசினை. ஏசி உள்ளதிலையோ, இல்லாட்டிச் சும்மா மண்டபத்திலையோ? பிறகு ஆர் மேக் அப், ஆர் வீடியோ, ஆற்றை சாப்பாடு எண்ட கேள்வி. இதையும் சில கலியாண மண்டபங்கள் வலு லேசாக்கி வைச்சிருக்கினம். எப்பிடி எண்டால் தங்கடை ஹோலிலை கலியாணம் நடந்தால் இன்னாரைத்தான் மேக் அப்புக்குப் பிடிக்க வேணும், இன்னாரைத்தான் வீடியோவுக்குப் பிடிக்க வேணும், இன்னாரிட்டைத்தான் சாப்பாட்டைச் சொல்ல வேணும் எண்ட கொண்டிஷன் வேறை வைச்சிருக்கினம். அதையும் தாண்டினால் வரவேற்பு என்ன மாதிரி. நாலாஞ் சடங்கு எண்டு பலதையும் பற்றின யோசினை. எப்பிடியும் குறைஞ்சது பெரிய பத்துக்கை கொண்டு போய்தான் முடிப்பினம். ஆனால் போன கிழமை பேப்பர் ஒண்டிலை பாத்தன். பண்டத்தரிப்பிலை கலியாண வீட்டுக் கெண்டு சிலவழிச்சது ஐம்பது லட்சத்துக்கு மேலையாம். வெளி நாட்டிலை இருந்து வந்த மாப்பிளை “ஆக்களை மட்டும் மாத்தாதையுங்கோ. மற்ற எல்லாத்தையும் புதுசா மாத்துங்கோ” எண்டு சொல்லிப் போட்டானாம். ஆனால் அது வெளி நாட்டுக்குப் போகேக்கை காணியை ஈடு வைச்சுத்தான் போனதெண்டு கேள்வி.பச்சத் தண்ணிக்கே வழி இல்லாமல் போய் வந்து இப்ப படுகிற பாட்டையும், ஊரைப்படுத்திற பாட்டையும் பாருங்கோவன்.
ஆனால் அதுக்கையும் நல்லதுகளும் இருக்கினம். ஒருதன் தன்ரை சகோதரியின்ரை பெடிச்சிக்கு் கலியாணம் எண்டு வந்தவன், வர முதலே சொல்லிப் போட்டு வந்திட்டானாம். “எல்லாம் நான் வந்து பாப்பன். வீட்டை மட்டும் கொஞ்சந் திரித்தி வெள்ளை அடிச்சு வையுங்கோ” எண்டு ஒரு ரூபா காசும் அனுப்பி வைச்சவன். வந்திறங்கின உடனை அவன் போய் கோயில் ஐயரைச் சந்திச்சு வீட்டிலைதான் கலயாணத்தை வைச்சிருக்கிறம் ஆனபடியால் வடிவா நேரத்தைச் சிலவழிச்சு முறைப்படி எல்லாம் செய்ய வேணும் எண்டு சொல்லிப் போட்டுத் தன்ரை தாயின்ரையும், தகப்பன்ரையும் பக்கத்திலை உள்ள உறவுக்காரருக்கும் சொல்லி ஒரு நூற்றைம்பது பேர் வந்திது. அவைக்குச் சாப்பாடு வீட்டிலையே செய்ய வேணும் எண்டு வடிவாச் சமைக்கக் கூடிய ஆக்களைச் சொந்தக்காரருக்கையே தெரிஞ்சு அதுக்குரிய சாமான் சக்கட்டை வேண்டிக் குடுத்துப் போட்டு கலியாணத்தை வலு வடிவாயும், திருப்தியோடையும் செய்து போட்டுப் போயிருக்கிறான். இதுக்கை படமும் எடுத்தவன்தான். வீடியோவும் எடுத்தவன். எல்லாச் செலவுகளும் அளவோடை இருந்திது. போக முன்னம் கலியாண வீட்டை முன்னுக்கு நிண்டு நடத்தின ஆக்களை வடிவாக் கவனிச்சான். அவையின்ரை குறை நிறைக் கேற்றமாதிரிக் கவனிச்சவன். எல்லாருக்கும் வலு சந்தோஷம்.
அதுக்கை அவன் செய்த நல்ல காரியம். கலியாணத்துக்குப் பிறகு எல்லாச் சடங்குகளும் முடிஞ்சு பொம்பிளை மாப்பிளையைக் கொண்டு இல்லாதவயளைத் தேடிப்போய் அவையின்ரை கையாலை அவைக்குத் தேவையான சாமான் சக்கட்டுகளை வேண்டிக் குடுத்தவன். அவன் மனுசன்
உதைச் சொன்னாப்போலை எங்கடை பேரன் சொல்லுறான் தன்ரை கலியாணத்தை ஒரு வயோதிப மடத்திலைதான் செய்ய வேணுமாம். ஏனெண்டால் அவைக்குத்தான் தங்கடை தங்கடை பிள்ளையளின்ரை கலியாண வீட்டைப் பாக்கிற சந்தர்பம் கிடையாது. அதை நாங்கள் செய்தால் அவையின்ரை மனம் எங்களை நல்லா வாழ்த்தும். அதோடை அந்த ஆசிகளிலைதான் மனமார வாழ்த்திறதெண்ட விசியம் இருக்கும் எண்டு தத்துவத்தையும் பேசுறான். அப்பதான் யோசிச்சன். எங்கடை பிள்ளை குட்டியளுக்கு நல்லதைச் சொல்லிக் குடுத்து நல்லதைக் காட்டிக் குடுத்து வளத்தால் அவையும் நல்ல விசியங்களைத்தான் செய்வினம் எண்டு. உப்பிடிக் கண்ட கண்ட ஆக்களுக்குப் பின்னாலை திரிஞ்சு வாளோடை அலையாயினம் எண்டு.
முந்தினைப்போலை ஆர் இருத்தி வைச்சுச் சின்னஞ் சிறுசுகளுக்கு கதை சொல்லினம். பாட்டுச் சொல்லிக் குடுக்கினம். முந்தி எங்களுக்கு வீட்டிலை சாப்பாடு தீத்தேக்கையே நிலாப் பாட்டுச் சொல்லித் தருவினம். பிறகு ஓடி விளையாடு பாப்பா. காலமை எழும்பிப் பள்ளிக்குடத்துக்குப் போக முதல் பல்லுத் தீட்டி முகம் கழுவச் சொல்லி சுவாமி கும்பிட்ட பிறகுதான் ஒரு வாய்த் தண்ணி கிட்டும். அதுக்கையும் ஏதாவது சிறிசா வீட்டு வைலையும் செய்து போட்டுத்தான் படிக்கப் போவேணும்.
எங்கடையளுக்கு ஒண்டை மட்டும் சொல்லுறன். நீங்கள் உள்நாடோ இல்லாட்டி வெளிநாடோ எண்டது பிரச்சினை இல்லை, கொஞ்ச நேரம் பிள்ளை, குட்டியளோடை இருந்து அவையளோடை கதையுங்கோ. அவைக்கு நல்லது கெட்டது எது எண்டு சொல்லிக்குடுங்கோ. இண்டைக்கு வைரைக்கும் அவையின்ரை மனதிலை எத்தினை சந்தேகங்களும் மறுமொழி தெரியாத கேள்விகளும் இருக்குமெண்டு தெரியுமோ? இல்லாட்டி அதைப்பற்றித்தான் யோசிச்சிருக்கிறியளோ? அவை அந்தக் கேள்வியளை உங்களிட்டைக் கேக்கப் பாப்பினம். நீங்கள் அவையளின்ரை கேள்வியளு்க்குச் சரியாக் காது குடுக்காட்டி அவை அந்தக் கேள்வியளை வேறை ஆரிட்டைக் கேக்கலாம் எண்டு ஆளைத் தேடுவினம். அப்ப அவையளுக்கு ஒரு பிழையான ஆள் அம்பிட்டால் அவையின்ரை கதை முடிஞ்சுது. பிறகு வாள் எடுப்பினம். தூள் அடிப்பினம். உள்ள கிரிச கெட்ட வேலையளை எல்லாம் செய்யப் பாப்பினம். ஒண்டு பிழைச்சால் தொடந்து எல்லாம் பிழைக்கிறமாதிரி எல்லாம் பிழைச்சுக் கடைசியா நீங்களும் பிழைச்சுப் போயிடுவியள்.
- “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்