குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இன்று இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்று ஊடகவியலாளர்களுக்கு காலை 11 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று புதன் கிழமையுடன்(19) 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது எனவும் குறித்த வளாகத்தில் இருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதெனவும் அவற்றில் மீட்கப்பட்ட 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அகழ்வு பணிகள் இடம் பெறும் தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் ஊடகவியலாளர்கள் அகழ்வு பணி இடம் பெறும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும்.
-ஒவ்வெரு புதன் கிழமையும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் வாராந்த பதிவுகள் ஊடகங்களுக்கு கருத்தாக வழங்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.