தன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்த நிலையில் அங்கு 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தன்சானியாவின் உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு குறித்த ஏரியினூடாக சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகே விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது உயிரிழப்புகள் 136 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாம் இன்று முதல் நான்கு நாட்கள் தேசிய துக்கதினமாக அனுசரிக்கவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜான் மகுபுலி உத்தரவு பிறப்பித்துள்ளார். படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.