வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வுகள் மேற் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. வெளிநாடுகளுடன் இணைந்து கல்விக்கான ஆய்வு நடத்தும் திட்டம் தற்போது இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப் பிரிவுகளில் மட்டுமே உள் ளது. இதனை ஏனைய பாடப் பிரிவு களுக்கு விரிவுபடுத்தும் வகையில் ‘கல்விக்கான வளர்ச்சி மற்றும் ஒன்றிணைந்த ஆய்வு (ஸ்பார்க்) எனும் பெயரில் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு எதிர்வரும் இரண்டு கல்வி ஆண்டுகளுக்காக 418 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், அமெரிக்கா, பிரித்தானியா , சீனா உள்ளிட்ட 25 வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ளலாம். இத் திட்டத்துக்காக தெரிவு செய்யப் படும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் இருக்க வேண்டும். இல்லையெனில், அதன் பாடப் பிரிவுகள், உலகின் சிறந்த தர வரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.