அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 12 வது நாளாக தொடர்கின்ற நிலையில் அவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பி.பி.சி. செய்திச்செவைக்கு வழங்கிய செவ்வியில் அருட்தந்தை சக்திவேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டு போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில அவர்களின் அரசியல் தீர்வாக இருக்கலாம், அன்றாட தேவைக்காக இருக்கலாம், எல்லாமே போராட்டத்தில்தான் தங்கியுள்ளது. இந்த அரசாங்கம், நல்லாட்சி முகத்துடன் செயற்படவில்லை என்பதை இது காட்டுகிறது. தமிழ் மக்களைப் போராட்டத்திற்குள் தள்ளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றுதான் அரசியல் கைதிகளின் போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.