Home இலங்கை லசந்த – பிரகீத் – கீத் நொயார் தவிர – தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி பேசப்படாமை வெட்கத்திற்கு உரியது…

லசந்த – பிரகீத் – கீத் நொயார் தவிர – தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி பேசப்படாமை வெட்கத்திற்கு உரியது…

by admin


ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,ஊடக சுதந்திரத்தின் மைல்கல்லாக இக் கொழும்பு பிரகடனம் அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன. கடந்த காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை.

கொழும்பு பிரகடனம் ஊடக சுதந்திரம், சமூகப் பொறுப்புணர்வு ஆகிய இரு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. செய்தியை வாசிக்கின்ற வாசகனுக்கென்று பொறுப்புணர்வு உண்டு. அதே வேளை ஊடக சுதந்திரம் என்பது உண்மையை அறிக்கைப்படுத்துவதாகும். ஊடக சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்கள் இடம்பெறும் அதே வேளை பொய்யான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களும் தற்போது பெருகி வருகின்றன. இது ஊடகங்களின் பொறுப்புணர்வற்ற தன்மையினையே காட்டுகின்றது.

ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி உண்மையான செய்திகளை வெளியிடுவதன் மூலம் சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும். நாட்டில் அதிகரித்து வருகின்ற ஊடகங்களின் பொறுப்புணர்வற்ற தன்மை கவலையளித்தாலும் ஊடக சுதந்திரத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்தி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு ஊடக சுதந்திரம் இன்றியமையாததாகும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க ….

நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு ஊடக சுதந்திரம் இன்றியமையாததாகும். ஊடக சுதந்திரத்தினைப் பயன்படுத்தி ஊடகங்கள் சுயாதீனமாக சரியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட நபர் நான் என்பதை அறிவேன். எம்முடைய அரசாங்கம் புதிய வீட்டுத்திட்டம், மாணவர் புலமை பரிசில் திட்டம், வீதி அபிவிருத்தி, சுகாதார விருத்தி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள போதிலும் எதிர்மறையான விடயங்களை மாத்திரமே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த செயற்திட்டங்களை வெளிகாட்டாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள மாநாடு நேற்று வியாழக்கிழமை சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்திற்காக பல ஊடகவியளாலர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டனர். பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. பல உயிர்கள் பறி போனது. அவ்வாறு போராடி பெற்ற கொழும்பு பிரகடனம் 20 வருடங்களை அடைந்துள்ளது.

ஊடக சுதந்திரத்திற்காக போராடிய லசந்த விக்ரமதுங்க , பிரகீத் எக்னலிகொட, கீத் நொயார் மற்றும் உதயன் பத்திரிகையின் சில ஊடகவியலாளர்கள் இன்று இல்லை. முன்பை விட இப்போது ஊடக சுதந்திரம் உயர் நிலையில் உள்ளது. ஊடக சுதந்திரத்தின் ஓர் அங்கமாகவே எமது அரசாங்கத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அரசாங்கத்தினைப் போலன்றி இந்த அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களால் சுயாதீனமாக செயற்பட முடிகின்றது. எனினும் இன்றளவில் ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடுகின்றனவா என சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டில் ஜனநாயகம் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும் எனில் அங்கு ஊடக சுதந்திரம் உருவாக வேண்டும்.

உண்மையான செய்திகள் மக்களைச் சென்று சேரும் போது ஜனநாயகம் வலுவடையும். ஆனால் தற்போது ஊடகங்கள் அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிறந்த செயற்திட்டங்களை வெளிக்கொணர்வதில்லை. எதிர்மறையான விடடயங்களை மாத்திரமே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இரு வகையான செய்திகளையும் மக்களிடம் சேர்ப்பதே ஊடக சுதந்திரம் ஆகும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, கீத் நொயார் தொடர்பில் பேசியவர்களும் விசாரணைகளை ஆரம்பித்தவர்களும் யார் என சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஊடகவியளார்கள் மீதான வன்முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் ஊடகங்களால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட நபராக நான் இருக்கின்றேன். அதற்கான சுதந்திரம் ஊடகங்களிடம் உண்டு. ஊடகவியலாளர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை அவர்களால் மாத்திரமே இல்லாமல் செய்ய இயலும். எனவே ஊடக சுதந்திரத்தின் ஊடாக சரியான செய்திகளை வழங்கி சுயாதீனமான முறையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசாங்கத்தையும் ஏனைய தனியார் துறையினரையும் நேர்மையாக செயற்பட வைக்கும் ஆற்றல் ஊடகங்களிடம் உள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர…

நாட்டின் அரசாங்கத்தையும் ஏனைய தனியார் துறையினரையும் நேர்மையாக செயற்பட வைக்கும் ஆற்றல் ஊடகங்களிடம் உள்ளது. ஊடகத்துறை என்பது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலுமிக்க சக்தியாகும். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் அதற்கு பங்குண்டு என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகிய இரண்டும் அடிப்படை மனித உரிமைகள் என்பதே எமது கொள்ளையாகும். 2016 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அரச தலையீடு இன்றி ஊடகவியலாளர்களால் செயற்பட முடியும் எனும் விடயம் உறுதி செய்யப்பட்டது. அதே போல் கடந்த காலங்களில் வீழ்ச்சி கண்டிருந்த ஊடக சுதந்திரம் 2015 இற்கு பின்னர் மேம்பட்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஊடக சுதந்திர குறிகாட்டியில் 138 ஆவது நிலையிலிருந்த எமது நாடு 2018 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் முதல் நிலையினை அடைவதற்கு பல வருடங்கள் தேவைப்படும் எனினும் தற்போது முன்னேற்றகரமான நிலையினை நோக்கியே நகர்ந்து வருகின்றோம்.

எனினும் ஊடகங்கள் சரியான செய்தியினை வழங்குவதிலும் பார்க்க பரபரப்பு செய்திகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட போது அவ்விடயம் தொடர்பில் வெளிவந்த தவறான பரப்புரைகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஊடக சுதந்திரம் மேலும் வலுவடையும். சுயதணிக்கைபடுத்தலுடனான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட செய்திகளே மக்களுக்கு தேவையாகும். அதனையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More