இந்தோனேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை என்று இந்தோனேசியா பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
இணைப்பு3- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி – உயிரிழப்புகள் 48 ஆக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி தாக்கியதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 48 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இணைப்பு2 – இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி தாக்கியதில் குறைந்தது 30 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது. வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் முதலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து பின்னர் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. எனினும் ;, சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்ததனால் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ஆங்காங்கே மனித உடல்கள் காணப்படுவதால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. சுனாமி பாதித்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி தாக்கம் – ஒருவர் பலி – பலர் காயம்
Sep 28, 2018 @ 15:12
இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது. வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தநிலையில், தற்போது கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.