இந்திய அணிக்கு முழு நேர தலைவர் பதவி ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். தலைமைப்பண்பில் மிகவும் முக்கியமானது, வீரர்களுக்கு அளிக்கும் உத்தரவாதம். அதை நான் செய்தேன் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 7-வது முறையாக கிண்ணத்தினை வென்றிருந்தது. பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி, கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும்.
இந்தநிலையில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் இந்திய அணிக்கு முழு நேர தலைவராக செயல்பட தயாராக இருக்கிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையாக நான் தயாராக இருக்கிறேன். இதில் என்ன தயக்கம் இருக்கிறது. என் தலைமையில் கோப்பையை வென்றுள்ளோம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் தலைவர்; பொறுப்பு ஏற்கத்தயாராக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த வகையில் கிரிக்கெட்டை விளையாட வேண்டும, ஒரு அணியாக எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்துள்ளேன். இந்தத் தொடரை நாங்கள் முழுமையாக நிறைவு செய்துள்ளோம். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக மேலும் பல போட்டிகள் உள்ளன. அதற்குள் சரியான வீரர்கள் அமைந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.