இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய 425 கோடி ரூபா பெறுமதியான திட்ட கருத்துருவுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருந்ததனையடுத்து பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
சிறுவர் குற்றவியல் சட்டத்தில், 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை வயது வந்தவர்களாக கருதலாம் எனவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2013-ம் ஆண்டு ‘நிர்பயா’ என்ற பெயரிலான திட்டத்தை உருவாக்கி, அதற்கு 2 ஆயிரம் கோடி ரூபா நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ் முக்கிய 8 நகரங்களில் ‘நிர்பயா’ திட்ட நிதியில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசு பங்கு 40 சதவீதம் என்ற விகிதத்தில், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னைக்கான பொறுப்பு அலுவலர்களாக மாநகராட்சி துணை ஆணையாளர் மாநகர கூடுதல் காவல் ஆணையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சென்னையில் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துருவை, உள்துறை அமைச்சு கேட்டதற்கமைய சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ளது.
இதில் சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்கான அம்சங்களை ஏற்படுத்து வதற்காக 13 வகையான திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை செயல்படுத்துவதற்காக 425 கோடி மதிப்பிலான கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளநிலையில் மத்திய அரசு அதனை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை முதன் முதலில் செயல்படுத்த உள்ள நகரம் சென்னை எனவும் ஏனைய நகரங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கமராக்களை பொருத்துவது, நவீன கழிப்பறைகளை அமைப்பது, அப்பகுதிகளில் சுகாதாரத்தை உறுதி செய்வது, அவசர காலத்தில் அழைப்பதற்கான உதவி எண்கள் மற்றும் கைபேசி செயலிகளை உருவாக்குவது, பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்குவது, எல்இடி தெரு விளக்குகள் அமைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இருக்கிறோம். மேலும், பெண் போலீஸாரை கொண்ட ரோந்து வாகனங்களை இயக்கவும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பேருந்துகளை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.