ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரி நேற்றையதினம் சுமார் 4 லட்சம் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் நடத்திய அமைதிப் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தது.இதன்போது ஸ்டெர்லைட் ஆலை யைத் திறக்கக்கோரி சிலர் மனு அளித்த நிலையில் அவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதனையடுத்து கருத்துக் கேட்புக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் 2-வது முறையாக சென்னையில் நேற்று மீண்டும் இடம்பெற்ற போது சுமார் 4 லட்சம் மனுக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ளன.