கந்தானை பிரதேசத்தில் பெண்ணொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் அருகில் இருந்த ஓடையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
களனி பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இளந்தாரிகே சஞ்சீவ எனும் அமுனுகம சஞ்சீவ என்ற குறித்த சந்தேகநபர் நேற்று (05.10.18) அநுராதபுரம் திரப்பனே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் காவற்துறைப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது தான் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறியதால் ஜாஎல தலுகம பிரதேசத்தில் வைத்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த சந்தேகநபர் காவற்துறை அதிகாரியைத் தாக்கிய பின் அருகில் இருந்த ஓடையில் பாய்ந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை மீட்டு றாகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். சடலம் றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது.
கந்தானை பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ம் திகதி கார் ஒன்றில் பயணித்த பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add Comment