குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் என இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் ஆதாரங்களை மறைக்கின்றார் எனவும் முக்கிய சாட்சியை கூட மௌனமாக்கியுள்ளார் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்த போதும் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடத்தப்பட்ட குறித்த 11 இளைஞர்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடற்படை பேச்சாளராக இருந்த டீகேபி தசநாயக்க மற்றும் சுமித் ரணசிங்க ஆகிய முக்கிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முகாம்களிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா விடுத்த வேண்டுகோளியைடுத்து வசந்த கரணாகொடவின் செயலாளர் சேர்மல் பெர்ணாண்டோ இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார் எனவும் சேர்மல் இது குறித்து கடற்படை தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த போதும் அந்த இளைஞர்களை விடுவிப்பதற்கோ அல்லது அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கோ கரணாகொட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு வாக்கு மூலங்களை வழங்கியுள்ள கடற்படையிரை முன்னாள் தளபதி உன்னிப்பாக கண்காணித்து வருகின்றார் எனவும் இதனை தொடர்ந்து 11 தமிழ் இளைஞர்கள் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதியும் முக்கிய சந்தேகநபராக மாறியுள்ளார் எனவும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
1 comment
நல்லாட்சி நாயகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேன, திரு. வசந்த கரன்னகொட போன்றவர்களுக்கு எதிராகத்தான் விசாரணை எதுவும் செய்யப்பட மாட்டாது என்று கர்ஜிக்கின்றார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக குற்றச்சாட்டுக்கு உள்ளான படை வீரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தான் தடுக்க மாட்டேன், என்று புதிதாக எதையோ சொன்னாரே? கடத்தப்பட்ட குறித்த 11 இளைஞர்களுக்கும் புலிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை, என்று அவரது அமைச்சின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரே கூறியிருக்கின்றார்கள். இனிமேலாவது திரு. வசந்த கரனகொடவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க ஜனாதிபதி முன்வருவரா?
இவர் போன்ற குற்றவாளிகள் எப்படித் தண்டனைக்கு உள்ளானால் நமக்கென்ன? அரசன் அன்றே கொல்வான், ஆனால் இறைவன் நின்று கொல்வார், என்பது பொய்த்து விடக்கூடாது.