அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் அதிசக்தி வாய்ந்ததாக தெரிவிக்கப்படும் இந்த சூறாவளியினால் ஏறிப்பட்ட மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி நேற்று புதன்கிழமை; நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களிலும் அதிகமான மரங்கள் வீதிகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது