அமெரிக்காவுடனான பலஸ்தீன விவகாரங்களை நிர்வாகம் செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பயோ தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிர்வாகக் காரணங்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்டது எனவும் ஜெருசலேம், மேற்குக் கரை அல்லது காஸா மீதான தங்கள் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் இது குறிக்காது என்றும் பாம்பயோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு பலஸ்;தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரு நாட்டு கொள்கை அடிப்படையில் தீர்வு வழங்காமல் பாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுகிறது என பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் சயீப் ஏரேகத் தெரிவித்துள்ளார்.
தங்களைத் தனிமைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் டிரம்பின் நிர்வாகம் மேற்கொள்ளும் இன்னொரு செயலாக இதைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த நடுநிலையை மீறி, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்தமையானது பலஸ்தீன நிர்வாகம் அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை நிறுத்தவும் வழிவகுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது